தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!
தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!
தேனி, மார்ச்., 07:
தீண்டாமை கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்றுங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்தவிடாமல் சாதிய வன்மத்துடன் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்ற கோரிக்கையுடன் அரண்மனைபுதூர் ஊராட்சி கிராம கமிட்டி தலைவர் பாலசுந்தரராஜ் மற்றும் கோட்டைப்பட்டி கிராம பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
இந்தியா நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளுக்கு மேலாகியும், தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது. தேனி மாவட்டம், தேனி வட்டம், அரண்மனை புதூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைப்பட்டி கிராமத்தில் ஜாதிய தீண்டாமை கொடுமை நடைபெறுகிறது. இங்கு வாழும் பட்டியல் பிரிவிலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படைவசதி திட்டங்களை தடுத்து வருகிறார்கள். கோட்டைப்பட்டி கிராமத்தில் வாழும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச்சேர்ந்த தங்கப்பாண்டி, சுந்தரவடிவேல், செல்வம் உட்பட பத்துபேர்கள் கொண்ட கும்பல் சேர்ந்து தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பொருளாதார ரீதியில் எந்தசூழ்நிலையிலும் வளர்ந்துவிடக் கூடாது என்ற சாதிய வன்மத்துடன், தனிப்பட்ட முறையிலும் மற்றும் அரசாங்கத்தால் நிதிஒதுக்கீடு செய்து தரப்படும் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தவிடாமல் தடுத்து வருகிறார்கள்.
தற்போது எங்கள் கிராமத்திற்கு நபார்டு வங்கி நிதிஉதவியுடன் தாட்கோ மூலம் திருமண மண்டபம் கட்ட அரண்மனைப்புதூர் ஊராட்சி மன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றி, மாவட்ட ஆட்சியர் அனுமதியின் பேரில் கட்டிடம் கட்டபோகும் நிலையில் கட்டிடம் கட்டக் கூடாது என தடுக்கிறார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்தக்கோரி தேனி மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 28.2.2025ம் தேதி அரண்மனைப்புதூர் ஊராட்சி கிராம கமிட்டி சார்பில் மனு கொடுத்தோம். அப்போது அரசு திட்டம் நிறைவேற்றப்படும் என்று கலெக்டர் உறுதியளித்தார். தேனி வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்தும். தற்போது மேற்படி நபர்கள் தொடர்ந்து இடையூறு செய்து வருகிறார்கள். எங்களின் கிராமத்தில் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் தீண்டாமை கொடுமையிலிருந்து விடுவிக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்படி தங்கப்பாண்டியன் தலைமையிலான இந்த கும்பல் சமூக ஒற்றுமையை சீர்குலைத்து சாதி பிரிவினையை ஏற்படுத்தி வன்முறையில் ஈடுபடும் இந்தகும்பல் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இதே கிராமத்தைச் சேர்ந்த சீனிமுத்து நாயக்கர் மகள் ஜெயசீலா என்ற பெண் கலப்பு திருமணம் செய்துகொண்டார் என்பதற்காக உயிருடன் எரித்துக்கொன்றார்கள். இந்த சம்பவம் ஊர்மக்களிடத்தில் பெரும் பயத்தை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக தெருவழியாக செருப்புபோட்டு நடக்கக்கூடாது, சாமி என்றுதான் கூப்பிடவேண்டும், பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்கக்கூடாது, அரசாங்கத்தில் செய்யப்படும் திட்டங்கள் எதுவாயினும் நாயக்கர் சமூகத்தினர் ஒத்துக்கொண்ட பின்னர்தான் செய்யவேண்டும் என்றும் மீறினால் சூடம் பொருத்தி வைத்து சாபம் விடுவோம், செய்வினை செய்து கொன்றுவிடுவோம் என்று பயம் காட்டுவதே வழக்கத்தில் வைத்துள்ளனர். இப்படியாக எழுதப்படாத சட்டத்தை மேற்படி நாயக்கர் சமூகத்தைச்சேர்ந்த கும்பல் நடைமுறையில் வைத்துள்ளனர். மேற்படி தங்கப்பாண்டியன் கோட்டைப்பட்டி அனைத்து சமூகத்திற்கும் சேர்ந்த பொதுப் பணம் ரூ.6,15,000/- (ஆறுலட்சத்து பதினைந்தாயிரம்) தான் வைத்துக்கொண்டு தர மறுத்து மோசடி செய்துள்ளார். இந்தக்கும்பல் மீது பொது விசாரணையின் அடிப்படையில் தீண்டாமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் பொதுமக்களின் வளர்ச்சிக்கு அரசு சார்பில் செயல்படுத்தப்படாத திட்டங்களை தடையின்றி நிறைவேற்றிடவும் தற்போது மேற்படி திருமணமண்டபம் (அறிவுமதி) கட்டிடத்தை கட்டிமுடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமாய் கோட்டைப்பட்டி கிராம பொதுமக்கள் சார்பில் கருணைகூர்ந்து மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட அதகாரிகளை கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகள் மற்றும் படங்கள்:
சிறப்புச் செய்தியாளர், குன்னூர் பாலா


Comments
Post a Comment