தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!
தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கம் வேதனை!!
சென்னை:
தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க மாநிலத்தலைவர் ஜெ.மூர்த்தி மற்றும் பொதுச் செயலாளர் வெ.லெனின் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கருவூலத்துறையில் தற்போது கிட்டத்தட்ட 1600 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கும் சூழ்நிலையில் குறிப்பாக இந்த காலிப்பணியிடங்கள் மாவட்ட மற்றும் சார்நிலைக்கருவூலங்களில் அதிகமாக இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக தலைமை அலுவலகத்தின் வெவ்வேறு பிரிவுகளில் இருந்து பல்வேறு வகையான புள்ளி விபரங்கள் கோரப்படுவதோடு IFHRMSல் தரவுகளை மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்யவும் உயர் அலுவலர்களால் நெருக்கடி தரப்படுகிறது.
கோரப்படுகின்ற புள்ளி விவரங்கள் அனைத்தும் 100% பணம் பெற்று வழங்கும் அலுவலர்களிடம் இருந்து பெறவேண்டிய தகவல்களாகும்.
ஒரு விபரம் முழுமை பெறுவதற்குள் அடுத்தடுத்த புள்ளி விபரங்கள் கோரப்படுவதால் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் கருவூல ஊழியர்களுக்கும் இடையே மிகுந்த மன அழுத்தத்தையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
பெறப்படும் தகவல்கள் சரியானதா என்பதை உறுதிப்படுத்த அந்தந்த துறை தலைவர்களால் மட்டும் தான் முடியும். அவர்கள் கொடுக்கின்ற விபரங்களை அப்படியே அனுப்புவதால் உறுதித்தன்மையை சரி பார்க்கும் சூழல் கூட கருவூல ஊழியர்களுக்கு இல்லாமல் போகிறது.
கருவூலத்தின் மூலம் பெறப்படும் விபரங்கள் சரியாக இருந்தால் மட்டுமே தமிழக அரசால் அடுத்தடுத்த திட்டங்களுக்கு அதை செயல்படுத்த இயலும்.
IFHRMS என்ற Kalanjiam ஆரம்பித்து 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் அடிப்படையான புள்ளி விபரங்கள் மட்டுமே தற்போது வரை தொடந்து கோரப்படுவதும் கடந்த காலங்களில் செய்த அதே டேட்டா பணிகளை தற்போது வரை மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்யச்சொல்வதும்,
புள்ளி விபரங்களை கோரும் போதும் தரவுகளை பதிவேற்றம் செய்யச்சொல்லும் போதும் உரிய கால அவகாசம் வழங்காமல் இன்றைக்குள் அனுப்ப வேண்டும் நாளைக்குள் முடிக்க வேண்டும் என்று ஊழியர்களை கட்டாயப்படுத்துவதும் காரணமாக இருக்கிறது.
ஆகவே புள்ளி விவரங்களை துறை தலைவர்கள் வழியாகவே கேட்டுப்பெறும்படி எங்கள் சங்கம் சார்பாக தொடர்ச்சியாக பலமுறை வலியுத்தி வருகிறோம்.
ஆனால் மீண்டும் மீண்டும் கூடுதல் இயக்குநர்களின் ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் மண்டல இணை இயக்குநர்களின் ஆய்வுக் கூட்டங்கள் வழியாக புள்ளி விபரங்களை சதவீதத்தின் அடிப்படையில் தயார் செய்து கேட்பதும் IFHRMSல் மீண்டும் மீண்டும் தரவுகளை பதிவேற்றம் செய்ய அழுத்தம் கொடுப்பதோடு கருவூல ஊழியர்களை பந்தய குதிரை போல் வேகமாக ஓட நிர்ப்பந்தம் செய்யும் நிகழ்வை முற்றிலும் தவிர்க்குமாறும், தேவைப்படுகின்ற தரவுகளை துறை தலைவர்கள் வழியாக அந்த அலுவலகங்களில் கேட்டுப்பெற வேண்டும் எனவும் IFHRMSல் கடந்த காலங்களில் செய்த பணிகளையே மீண்டும் செய்ய வலியுறுத்துவதையும் தவிர்க்க வேண்டும் எனவும் தமிழக அரசையும் கருவூலத்துறை நிர்வாகத்தையும் கேட்டுக்கொள்கிறோம்.
இதே போன்ற நிகழ்வு தொடர்ச்சியாக நடைபெறும் எனில் எங்கள் ஊழியர்களை பாதுகாப்பதோடு அல்லாமல் கருவூலத்துறையின் தனித்தன்மையை காக்கவும் எங்களது சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தை கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் என அவர்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

Comments
Post a Comment