தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு..
கேரளா நதிநீர் பிரச்சனைகள் குறித்து தமிழ் நாட்டு முதலமைச்சருக்கு, ஐந்து மாவட்ட விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம்.. கோரிக்கை விடுத்துள்ளார். அதன் சாராம்சம்..
ஐயா வணக்கம்..
நாளை (28-02-2022) சென்னையில் நடைபெற இருக்கும் தங்களின் சுயசரிதையான, உங்களின் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவிற்கு, இந்தியா முழுவதும் இருந்து பல தரப்பட்ட ஆளுமைகளும் கலந்துகொள்ள வருகிறார்கள், மிக்க மகிழ்ச்சி. உங்களோடு சேர்ந்து நாங்களும் அவர்களை வரவேற்கிறோம்.
ஆனால், சமீப காலங்களாக தொடர்ந்து தமிழகத்திற்கு எதிரான போக்கில் மிகுந்த கவனம் செலுத்தி வரும், கேரள மாநில முதல்வர் தோழர் பினராயி விஜயனுடைய வருகை அத்தனை உவப்பாக எங்களுக்கு இல்லை.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மட்டுமின்றி, பல்வேறு நீர் சார்ந்த சிக்கல்களில், தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராக முட்டுக்கட்டை போட்டு வருவதோடு, முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை என்கிற அவரது பிடிவாதம் உறுதியாக இருக்கும் நிலையிலும் கூட,
அவரை அழைத்திருப்பது உங்களின் உயர்ந்த பெருந்தன்மை என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனாலும் கூட அவரிடம், நாம் பேச வேண்டிய தேவையும் அவசியமும் நிறையவே இருக்கிறது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே...
எழுத்துப்பூர்வமாக தோழர் பினராயி விஜயன் அவர்களிடம் நாங்கள் அளிக்க வேண்டிய பிரச்சினைகளின் சாராம்சத்தை உங்களிடம் கையளிக்கிறோம் ஐயா.
இனி பேசவேண்டியது நீங்கள்தான் ஐயா.
இதோ இந்த பட்டியலில் உள்ள பிரச்சினைகளை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய மாண்புமிகு கேரள மாநில முதல்வர் அவர்கள் முன்வரவேண்டும்.
1-கன்னியாகுமரி மாவட்டம் - நெய்யாற்றின் கரை இடதுகரை கால்வாயிலிருந்து விளவங்கோடு தாலுகாவில் உள்ள 14 ஆயிரம் ஏக்கருக்கு வந்து கொண்டிருந்த தண்ணீர், கடந்த 23 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழக மக்களின் வரிப்பணத்தில் பெருந்தலைவர் காமராஜரால் கட்டப்பட்ட இந்த அணை, மொழிவழிப்பிரிவினையின் காரணமாக கேரளாவிற்கு சென்று விட்டதே இந்த பின்னடைவிற்கு காரணம்.
போர்க்கால அடிப்படையில் நெய்யாற்றின்கரை இடதுகரைக் கால்வாய் திறந்து விடப்பட வேண்டும்.
2-தென்காசி மாவட்டம் - சிவகிரி தாலுகாவில் வாசுதேவநல்லூருக்கு மேற்கே, 4700 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த செண்பகவல்லி கால்வாய் மூலம் தமிழகத்தின் வறண்ட பகுதிகளாக இன்றளவும் அறியப்படும் விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள, ஒரு லட்சத்து 35 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெற்று வந்தது.
திடீரென ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீர் மேற்கு நோக்கி கேரளாவிற்கு செல்கிறது.
வானம் பார்த்த பூமியாக கிடக்கும் வாசுதேவநல்லூர் தாலுகா, சங்கரன்கோவில் தாலுகா, திருவேங்கடம் தாலுகா, கோவில்பட்டி தாலுகா, சாத்தூர் மற்றும் விளாத்திகுளம், இருக்கன்குடி ஆகிய பகுதிகள் கடும் வறட்சியில் சிக்கித் தவிக்கிறது.
1992 ம் ஆண்டில் செண்பகவல்லி கால்வாயை, கேரள மாநில அரசு, இரண்டு வார காலத்திற்குள் சீர்திருத்தம் செய்து கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும் கூட இன்றுவரை அது குறித்து யாரும் கவலை கொண்டதாகத் தெரியவில்லை.
தண்ணீரின்றி கண்ணீரோடு காத்திருக்கிறது தென்மாவட்ட கரிசல் காடுகள்.
3-தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 18 ஆயிரம் ஏக்கருக்கும், மேற்கண்ட ஐந்து மாவட்டத்தில் வாழும் 90 இலட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், வாழ்வாதாரமாக விளங்கும்- முல்லைப்பெரியாறு அணையில், 2006 மற்றும் 2014 ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் கொடுத்த உத்தரவுப்படி நீரை தேக்க விடாமல் தொடர்ந்து பிரச்சனை செய்து வருகிறது இதே கேரளம்.
அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட வேண்டும். அதற்குத் தடையாக இருக்கும் பேபி அணை பலப்படுத்தப்பட வேண்டும். அணையின் முழு கட்டுப்பாடும் தேனி மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட வேண்டும்.
4-திருப்பூர், கரூர் -ஈரோடு மாவட்ட பாசனத்தின் முக்கிய நதியாக விளங்கும் அமராவதி, காவிரியின் கிளை ஆறுகளில் ஒன்று. அமராவதி ஆற்றின் குறுக்கே, இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகாவில் உள்ள மறையூர் அருகே தூவானம் எனுமிடத்தில் 3 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணை கட்டியே தீருவேன் என்று தொடர்ந்து பிரச்சினை செய்து வருகிறது கேரளா.
மறையூருக்கருகே பாம்பாற்றை மறித்து தடுப்பணையை கேரளா கட்டினால், அமராவதி அணையை நம்பி இருக்கும் மூன்று மாவட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்படும்.
5-கோவை- திருப்பூர் - ஈரோடு மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கும் உலகப் பெரும் அதிசயமான பரம்பிக்குளம் - ஆழியாறு ஒப்பந்தம் 20 ஆண்டுகளாக நீட்டிக்க விடாமல், கிடப்பில் போட்டிருக்கிறது கேரளா. ஆனைமலையாறு - நல்லாறு அணை கட்ட அனுமதி தராமல் தொடர்ந்து இழுத்தடிப்பும் நடக்கிறது.
கேரள மாநில அரசின் எல்லைக்குள் உள்ள பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு, உள்ளிட்ட மூன்று அணைகளில் கேரளா செய்யும் பிடிவாதம் ஆகியவற்றால், அதை நம்பி இருக்கும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
6-கோவை மாநகரத்திற்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் - பில்லூர் அணையிலிருந்து நீர் எடுப்பதற்கு தொடர்ந்து இடையூறு செய்து வருகிறது கேரளா.
7-ஈரோடு, திருப்பூர், கரூர் -உள்ளிட்ட மாவட்டங்களின் செழிப்புக்கு காரணமாக இருக்கும், பவானி ஆற்றை மறித்து, பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகிலுள்ள முக்காலியில் அணை கட்ட கேரளா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
8-ஈரோடு மாவட்டம் கீழ் பவானிக்கு தெங்குமரஹடா வழியாக கொண்டு வந்து சேர்க்க வேண்டிய மோயாறு தண்ணீரை, ஒரு ஏக்கர் பாசனம் கூட இல்லாத சாலியாற்றோடு இணைத்து வயநாடு மாவட்டத்தில் ஓடவிட்டு இருக்கிறது கேரளா. போர்க்கால அடிப்படையில் மோயாறு தண்ணீரை கீழ்பவானிக்கு கொண்டுவந்து சேர்த்தால், கிட்டத்தட்ட கூடுதலாக மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர்கள் பாசன வசதி பெறும்.
இதுபோல் இன்னும் உள்ள சிறிய சிறிய பிரச்சனைகளையும்,
தங்களது புத்தக வெளியீட்டு விழாவிற்கு வரும் கேரள முதல்வர் அவர்களிடம் தமிழ்நாட்டு - கேரளா இடையே நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள தண்ணீர் பங்கீட்டு பிரச்சினைகளையும் பேசி தீர்வு செய்து தமிழ்நாட்டிற்கான உரிய நீரை பெற்றுத் தர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
ச.அன்வர் பாலசிங்கம்
ஒருங்கிணைப்பாளர்
ஐந்து மாவட்ட விவசாய சங்கம்.
Comments
Post a Comment