Skip to main content

உக்ரைன் மீது போர் நடத்த வேண்டிய தேவை ரஷ்யாவிற்கு எங்கே வந்தது...? அலசுகிறார் அன்வர் பாலசிங்கம்.!

உக்ரைன் மீது போர் நடத்த வேண்டிய தேவை ரஷ்யாவிற்கு எங்கே வந்தது...?

வரலாறும், புவியலும்..

மனிதகுல வரலாற்றில் பல கொடூரங்களை அநாயாசமாய் அரங்கேற்றிய இரண்டாம் உலகப்போர் முடிந்து கிட்டத்தட்ட 77 ஆண்டுகள் ஆகிவிட்டது.

அதற்குப் பின்னால் செஞ் சீனத்தின் மாவோ நடத்திய திபெத் ஆக்கிரமிப்பு, அமெரிக்கா நடத்திய வியட்நாம் போர், 20 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த ஈரான்- ஈராக் யுத்தம், 1962 ல் நடந்த இந்திய சீனப் போர், வங்காள தேசம் என்றொரு நாடு உருவாக இந்தியா-பாகிஸ்தான் மீது தொடுத்த  போர், ஆண்டு முழுவதும் நடக்கும் இஸ்ரேல்-பாலஸ்தீன யுத்தம், அரபு வசந்தம் என்கிற பெயரில் மத்தியகிழக்கில் வெடித்த உள்நாட்டு கிளர்ச்சிகள், ஆப்கனை உலுக்கி எடுத்த தலிபான்கள் நடத்திய கலவரங்கள், இலங்கை மண்ணில் நடந்த உள்நாட்டு உரிமைப்போர் என உலகம் ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒரு பகுதியில் யுத்தங்களை நடத்திக் கொண்டுதான் இருக்கிறது.

இதற்கு சித்தாந்த முலாம் பூசப்பட்டாலும்,அடிப்படையாக இருப்பது ஆசை மட்டுமே.

Survival of the fittest வலிமை உள்ளவை மட்டுமே வாழும் என்கிற வாசகம் பூமிப்பந்தில் காட்டுக்கும் பொருந்தும் நாட்டுக்கும் பொருந்தும்.

அந்த வகையில் முதல் இரண்டு உலகப் போர்களை நடத்திய மேற்குலகம், மிகப்பெரிய மனிதகுல பேரழிவுகளை கண்ணால் கண்ட பிறகும், அடுத்தடுத்து சண்டைகளுக்கு தயாராவது தான் நமக்கிருக்கும் மிகப்பெரிய ஆச்சரியம்...!

1945 ல் இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த ஹிரோஷிமா நாகசாகி மீதான அணுகுண்டு வீச்சு, அழிவின் உச்சமாக உணரப்பட்டது. அணுவின் தாக்கம் எத்தகையது என்பதை உணர்ந்த சாமானியர்கள் ஆடிப் போனார்கள். ஆனாலும் உலகம் திருந்தவில்லை.

கட்டுரையாளர்

கட்டுரையாளர்

1945 ஆகஸ்ட் 9 ஆம் தேதியோடு, அதாவது நாகசாகி வீழ்ந்த பிறகு, ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டிய யுத்தங்கள், பனிப்போர் (cold war) என்கிற பெயரில் 1989 ஆம் ஆண்டு வரை நீடித்தது.

இந்தப் பனிப் போரை நடத்தி உலகத்தை நொடிக்கு நொடி பதட்டத்தில் வைத்திருந்த அமெரிக்காவும் ரஷ்யாவும்தான், இன்றைக்கு உக்ரைனில் நடக்கும் போருக்கான முழுப் பொறுப்பாளர்கள்.

1917-ஆம் ஆண்டு சோசலிசப் புரட்சியின் மூலம் ரஷ்யாவை, ஜார் மன்னர்களின் பிடியிலிருந்து மீட்ட, விளாடிமிர் லெனின் என்கிற மகத்தான மனிதனால் கட்டமைக்கப்பட்ட ஒருமித்த கருத்தின் அடிப்படையிலான சோவியத் ரஷ்யா, உலகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டான பூமியாக மலர்ந்திருந்தது.

எதுவும் எவருக்கும் சொந்தமில்லை, எல்லாருக்கும் எல்லாமும் என்கிற மார்க்சியத்தின் மகத்தான குறிக்கோளை நடைமுறைப்படுத்திய மாமேதை லெனினின் சோசலிச கோட்பாடு, ஈர மனம் படைத்த முதலாளிகளையும் வசியம் செய்த ஒரு கோட்பாடு.

சொல்லப்போனால், மாமனிதர் லெனின் ரஷ்யாவில் கட்டமைத்த அந்த சோசலிச  பூமிதான், அடுத்தடுத்த நூற்றாண்டுகளுக்கும்  சர்வதேசத்தின் மாடலாக இருந்திருக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டம், அவருக்கு அடுத்து வந்த ஜோசப் ஸ்டாலின், லெனின் கட்டமைத்த அத்தனை சோசலிச பிம்பங்களையும் உடைத்தெறிந்து, தன்னை ஒரு சர்வாதிகாரியாக முன்னிலைப் படுத்திக் கொண்டார்.

கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களை சைபீரிய பாலைவனங்களில் லட்சக்கணக்கில் குழிதோண்டிப் புதைக்கவும் செய்தார்.

சீர்திருத்தங்கள் என்கிற பெயரில் ஜோசப்  ஸ்டாலின் நடத்திய அட்டூழியங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை.

இன்றளவும் உலகத்தின் பெரும் பரப்பளவை கொண்ட நாடு என்று அறியப்படும் ரஷ்யா, இரண்டாம் உலகப் போர் முடியும் வரை, பெரிதாக ஆக்கிரமிப்புகள் எதையும் செய்யவில்லை.

ஆனால் இரண்டாம் உலகப்போர் கொடுத்த தெம்பு அதை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது.

ஒட்டுமொத்தமாக கிழக்கு ஐரோப்பாவையே, தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த ரஷ்யா, ஜெர்மனியை  கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி என்று இரண்டு நாடாக துண்டாடி, கிழக்கு ஜெர்மனியை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டது.

கூடுதலாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் சென்ற மேற்கு ஜெர்மனியை முற்றிலும் துண்டிக்கும் விதமாக, தலைநகர் பெர்லினின் மையப்பகுதியில் நீண்ட சுவர் ஒன்றையும் எழுப்பியது ரஷ்யா.

ருமேனியா, போலந்து, ஹங்கேரி , கியூபா என கிட்டத்தட்ட எண்பத்தொரு நாடுகளை தன் வசப்படுத்திக் கொண்ட ரஷ்யா, 1945 முதல் 1989 வரை கிழக்குலகத்தில், நடந்து கொண்ட விதம் முற்றிலும் லெனின் கட்டமைத்த சோசலிசத்திற்கு எதிரானது.

அதற்காக முதலாளித்துவ நாடுகளுக்கு தலைமை தாங்கிய அமெரிக்காவிற்கு நாம் சாமரம் வீசவும் தயாராக இல்லை. ரஷ்யா சர்வாதிகாரி என்றால் அமெரிக்கா மோசமான சர்வாதிகாரி என்பதே நிதர்சனமான உண்மை.

ஆனால் தற்போது உக்ரைனில் போரை நடத்துவது ரஷ்யா என்பதால், அது குறித்தான பார்வையே இங்கு அவசியமாகப் படுகிறது.

இப்படியாக 1917 லிருந்து 1989 ஆம் ஆண்டு வரை, உலகத்தின் அசைக்க முடியாத சக்தியாக அறியப்பட்ட ரஷ்யா, மிகையீல் கார்ப்பச்சேவ் என்கிற கம்யூனிஸ ஆட்சியாளரின் அமெரிக்கா ஆதரவு போக்கால், ஆட்டம் கண்டது.

சோசலிசத்தில்  சீர்திருத்தம் வேண்டும் என்கிற கார்பச்சேவின் இரண்டு நூல்களான பெரிஸ்த்ராய்க்கா மற்றும் கிளாஸ்நாஸ்ட் ஆகியவை  அடுத்த கட்டத்திற்கு ரஷ்யாவை கொண்டு சென்றது.

பல்வேறுபட்ட வடிகட்டல்களுக்கு பின் உருவாக்கப்பட்ட சோவியத் ரஷ்யா என்கிற மகத்தான தேசம் இரண்டு புத்தகங்களால் வீழ்த்தப்பட்டது.

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோ முழுவதும் செங்கொடி இறக்கப்பட்ட காட்சிகளும், பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த மாமனிதர் லெனினின் உடலை அசைத்துப் பார்க்க கிளம்பிய கும்பல்களும், மாமனிதர் மார்க்சின் திருவுருவச் சிலைகளை பொக்லைன் கொண்டு பிடிங்கி எறிந்த காட்சிகளும், உலகத்தை அதிர்ச்சியில் உறையச் செய்தது.

எப்படி நடந்தது இந்த மாற்றம் என்று அறிவதற்கு முன்னால் ரஷ்யா ஒரு குடிகாரனான  போரிஸ் எல்ட்சினின் கைக்கு போனது.

கிரெம்ளின் மாளிகையில் சிகப்பு தரைவிரிப்பு அகற்றப்பட்டு, மஞ்சள் தரை விரிப்பு விரிக்கப்பட்டது.

ரஷ்யாவின் பிடியிலிருந்த கிழக்கு ஐரோப்பா முழுவதும் சுதந்திர கொண்டாட்டங்கள் கொடிகட்டிப் பறந்தது. ஹங்கேரியில் மறைந்த கம்யூனிஸ ஆட்சியாளர் இம்ரே நாகியின் உடலை தோண்டி எடுத்து பாடையில் ஏற்றி, தலைநகர் புடாபெஸ்ட் முழுவதும் செருப்பால் அடித்து ஊர்வலம் நடத்தினார்கள் ஜனநாயகத்தை விரும்பிய ஹங்கேரியர்கள்.

போலந்து கம்யூனிசத்தின் பிடியிலிருந்து விடுபட்டு, ஒரு சைக்கிள் கடை வைத்திருந்த லெக் வலேசா என்கிற சாமானியனின் பின்னால் அணிதிரண்டது.

கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியை  துண்டாடி ரஷ்யாவால் கட்டப்பட்டிருந்த பெர்லின் சுவர் கிழக்கு ஜெர்மனி மக்களால் துண்டு துண்டாக உடைத்தெறியப்பட்டு ஜெர்மனி  ஒன்றிணைந்தது.

தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான கியூபாவில் பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு நெருக்கடி எதிலும் சிக்கவில்லை. காரணம் அது எப்போதும் ரஷ்யாவின் மேற்பார்வையில் இல்லை.

சோவியத் ரஷ்யா என்கிற பெயரில் பெரும் பரப்பை கொண்டிருந்த ரஷ்யா 15 துண்டுகளாக உடைந்து சிதறியது. சில நாடுகள் தானாகவே பிரிந்து சென்றது. ஆனால் அதிலும் உக்ரைன் ஒரு ஜனநாயகத்தை விரும்பி, 1991ல் நடந்த வாக்கெடுப்பின் மூலமே, ரஷ்யாவிடமிருந்து  தன்னைத் தனியாகப் பிரித்துக் கொண்டது.

1945 லிருந்து, 1989 வரை ஒவ்வொரு நொடியும் உலகத்தைப் பதட்டத்தில் வைத்திருந்த இரண்டு நாடுகளில் ஒன்றான ரஷ்யா, 15 துண்டுகளாக உடைந்து சிதறியதும், பனிப்போர் நின்றிருக்கலாம். ஆனால் அது கவனமாக அடுத்த கட்டத்திற்கு வேறொரு வடிவத்தில் நகர்ந்தது.

ரஷ்யா விழுந்ததும் உருமாற்றம் செய்யப்பட்ட கம்யூனிசத்தின் இன்னொரு வடிவமான மாவோயிசம், சீனாவை மையம் கொண்டு அடுத்த கட்ட சர்வாதிகாரத்திற்கு தூபம் போட்டது. 

போரிஸ் எல்ட்சினுக்குப் பின்னால், மறுகட்டமைப்புக்கான வேலைகள் ரஷ்யாவெங்கும் முழுவீச்சில் தொடங்கியது.

லிதுவேனியா, லாட்வியா, எஸ்டோனியா, ஜார்ஜியா, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான் என ரஷ்யாவிலிருந்து பிரிந்து போன 15 நாடுகளில் ஒன்றுதான் இந்த உக்ரைன்.

ரஷ்யாவின் எல்லையையொட்டி அமைந்திருக்கும் இந்த உக்ரைன் செல்வ வளம் பொருந்திய நாடுகளில் ஒன்று. கல்வியில் முன்னேறிய நாடாக அறியப்படும் இந்த உக்ரைனில்தான், பெரும் விபத்தை ஒரு காலத்தில் ஏற்படுத்திய செர்னோபில் அணு உலைத் தளம் அமைந்திருக்கிறது.

கடந்த 2000 மாவது ஆண்டில் ரஷ்யாவில் ஒரு எளிய மனிதனாக பொறுப்பேற்றுக்கொண்ட, சர்வ வல்லமை பொருந்திய கேஜிபி யின் முன்னாள் உளவாளியான விளாடிமிர் புடின், ரஷ்யாவின் பழைய வரலாறுகளை தோண்டித் துருவி படிக்க ஆரம்பித்ததின் விளைவு, மறுபடியும் ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யாவை உருவாக்கவேண்டும் என்கிற நாசகார கனவுக்கு அவரை அழைத்துச் சென்றது.

அதேநேரத்தில் ரஷ்யாவிடம் இருந்து பிரிந்த 15 நாடுகளிலும், தன்னுடைய மேலாதிக்கத்தை நிறுவ அமெரிக்கா மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்தது.

இரண்டாம் உலகப்போரில் ரோம்-பெர்லின்-டோக்கியோ அச்சு நாடுகள், என்கிற பெயரில் ஒன்றிணைந்த இத்தாலியின் முசோலினி, ஜெர்மனியின் ஹிட்லர், ஜப்பானின்  மன்னர் அஹிஹிடோ  கூட்டணிக்கு எதிராக அமெரிக்கா, ரஷ்யா (அன்றைக்கு ரஷ்யா அமெரிக்காவுடன் கூட்டணியில் இருந்தது) மற்றும் பிரிட்டனால் உருவாக்கப்பட்ட நேட்டோ North Atlantic treaty organisation என்கிற இராணுவக் கட்டமைப்பில், ரஷ்யாவிடம் இருந்து பிரிந்து சென்ற நாடுகளை சேர்ப்பதற்கு முயற்சித்த அமெரிக்காவின் சூழ்ச்சி, ரஷ்யாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

டேட்டாவை உருவாக்குவதில் ரஷ்யா முக்கிய பங்கு வகித்தாலும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அது நேட்டோவில் இருந்து வெளியேறியது.

முழுக்க முழுக்க அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் நேட்டோவில் ஏற்கனவே கடந்த 2004 ல் எஸ்டோனியா லாட்வியா மற்றும் லிதுவேனியா இணைந்து விட்டிருந்தது. அவைகளை ரஷ்யா பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

ஆனால் தன்னுடைய எல்லையையொட்டி இருக்கும் உக்ரைன் நேட்டோவின் பிடியில் சென்றால், அதனால் ஏற்படும் விளைவுகளை சந்திக்க ரஷ்யா தயாராக இல்லை.

செர்னோபில் அணு உலை மட்டுமல்ல, உலகில் மூன்றாவது மிகப்பெரிய அணு ஆயுத நாடாக உக்ரைன் மாறி இருந்ததும் அதற்கொரு காரணம்.

ஆனால் கடந்த 1994 ம் ஆண்டில் அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் கொடுத்த உத்தரவாதத்தின் பேரில், உக்ரைன்  தன்னிடமிருந்த அணுஆயுதங்களை அழித்தது என்றும் கூறப்படுகிறது.

ஆனாலும் உக்ரைன் மீதான அமெரிக்காவின் பாசமும், ரஷ்யாவின் பயத்தின் மீதான  விளைவுமே  இன்றைய தாக்குதலுக்கான மூலகாரணங்கள்.

ரஷ்யாவில் தன்னுடைய வலிமையான மேலாதிக்கத்தை கவனமாக  நிறுவிய புடின், தங்களிடமிருந்து பிரிந்து சென்ற நாடுகளை தொடர்ந்து கண்காணிக்க ஆரம்பித்தார்.

அமெரிக்காவிற்கு ஏதாவது ஒரு நாட்டுடன் சண்டை இழுக்கவில்லை என்றால் தூக்கம் வராது. ஒன்று சண்டை போடுவார்கள் அல்லது ஏதாவது ஒரு நாட்டு உள் விவகாரத்தில் தலையிட்டு சட்டாம்பிள்ளைத்தனம் செய்து கொண்டிருப்பார்கள்.

பொருளாதார மற்றும் ராணுவ ரீதியாக சீனாவோடு நேரடியாக மோத முடியவில்லை. மோதினால் என்ன நடக்கும் என்பது அமெரிக்காவிற்கு நன்றாகவே தெரியும்.

அதனாலேயே அது ரஷ்யாவை தலையெடுக்க விட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தது.

அதற்காக கே ஜி பி யின் முன்னாள் உளவாளியும் சும்மா இருக்கவில்லை. பழைய நிலையை எட்ட வேண்டும் என்கிற அவரது தாகத்தின் ஒரு பகுதியாக, உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவை கடந்த 2013 இல் ஒரு வாக்கெடுப்பு மூலம் தங்களோடு இணைத்துக் கொண்டார்.

கூடுதலாக உக்ரைன் வசமிருந்த கருங்கடல் பகுதியை, உக்ரைனிடமிருந்து நீண்டகால குத்தகைக்கு பெற்றுக்கொண்டது ரஷியா.

அதோடு தன்னிடம் இருந்து பிரிந்து சென்ற 15 நாடுகளுக்கும் கேஜிபி எனும்  உலகப்புகழ்பெற்ற உளவு அமைப்பை ஊடுருவ வைத்து நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வந்தார்.

அந்த அடிப்படையில்தான் 2008 ஆம் ஆண்டு ரஷ்யாவில் இருந்து பிரிந்து சென்ற ஜார்ஜியாவை ஆக்கிரமித்து அதிர்ச்சியூட்டினார் புடின்.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளான  போலந்து மற்றும் ருமேனியாவில் நேட்டோ படைகள் அதிகளவில் குவிக்கப்பட்டு இருந்தது புடினை எரிச்சலடைய வைத்தது.

இந்த சமயத்தில்தான் உக்ரைனில் உள்ள ரஷ்ய எல்லையையொட்டிய லூகான்ஸ்க், டொனெட்ஸ்க் ஆகிய இரண்டு பிரதேசங்களிலும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள், உக்ரைனுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கினார்கள்.

அந்தக் கிளர்ச்சியை தூண்டி விட்டதும் ரஷ்யா தான்.

இன்னும் சொல்லப்போனால் ரஷ்யாவிடம் இருந்து பிரிந்து சென்ற 15 நாடுகளிலும் ரஷ்யா அனுப்பிய கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறார்கள் என்பது முக்கியச் செய்தி.

-தன் வசம் உள்ள கருங்கடல் பகுதியில் நேட்டோ படைகளின் அணிவகுப்பு,

-போலந்து ருமேனியா நாடுகளில் நேட்டோ படைகளின் குவிப்பு,

-நேட்டோ படையணியில் உக்ரைன் இல்லாதது,

-சீனா மற்றும் பெலாரஸ் நாடுகளின் ஆதரவு,

-உக்ரைனில் உள்ள இரண்டு மாகாணங்களான லுகான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் ஆகிய இரண்டு பிரதேசங்களில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போராட்டக்காரர்கள் நடத்திய எழுச்சிமிக்க கிளர்ச்சி,

-உக்ரைனை  தனிமைப்படுத்துவதன் மூலம் அங்கிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் உணவுப் பொருட்களை லாவகமாக தடுக்க முடியும் என்ற கணிப்பு,

தன்னுடைய பலத்தை சோதித்து பார்ப்பதற்கான களம் இந்த உக்ரைன் என்கிற  ஒருமித்த முடிவுக்கு வந்த ரஷ்ய அதிபர் புடின்...

திடீரென ஒரு நாள் ரஷ்ய  தொலைக்காட்சியில் தோன்றி உக்ரைனில் உள்ள "லூகன்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க்" ஆகிய இரண்டு மாகாணங்களில் வாழும் ரஷ்ய மொழி பேசும் மக்களை, உக்ரைன் அரசுப் படைகளிடமிருந்து காப்பதற்காக போர் தொடங்குவதாக அறிவித்தார்.

ஐந்து நாட்களாக போர் நடந்து கொண்டிருக்கிறது.

போரை ரஷ்யா தொடங்குவதற்கு காரணமாக இருந்த அமெரிக்கா உள்ளிட்ட 22 நாடுகள், உக்ரைனுடனான தொடர்பை துண்டித்ததோடு, உக்ரைனில் ரஷ்யவால் நடத்தப்படும் மனித உரிமை மீறலையும், பேரழிவுகளையும் வேடிக்கை பார்த்து நிற்கிறது.

ரஷ்யாவிடமிருந்து கம்யூனிசம் விடைபெற்றுக்கொண்ட 1989 ஆம் ஆண்டில், சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில், ஜனநாயகம் கேட்டு போராடிய நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சீன அரசு, அமெரிக்கா ரஷ்யாவிற்கு எதிராக களம் இறங்கினால், தான் ரஷ்யாவிற்கு ஆதரவாக களமிறங்க தயார் நிலையில் நிற்கிறது.

இதுவரை அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை ரஷ்யா. ஒருவேளை அமெரிக்கா போரில் குதிக்குமானால் அணு ஆயுதங்களையும் எடுக்க ரஷ்ய தயங்காது என்றே நினைக்கிறேன்.

ஐநா மன்றம் என்கிற சோம்பேறி மடம் வழக்கம்போல் ஆய்வுக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது.

போர் தொடங்கிய மூன்றாவது நாளிலேயே ஒரு லட்சத்திற்கும் அதிகமான உக்ரைனியர்கள் போலந்து எல்லையில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.

பிற நாடுகள் இந்த விடயத்தில் தலையிட்டால் வரலாறு காணாத அழிவு ஏற்படும் என்ற புடினின்  அறிக்கையை கண்டு மிரண்டு நிற்கிறது உலகம்.

வசதி உள்ளவன் தரமாட்டான், வயிறுப் பசித்தவன் விடமாட்டான் என்று பட்டுக்கோட்டையார் எளிமையாக விளக்கப்படுத்திய கம்யூனிசம், எதுவுமற்ற அப்பாவிகளை உக்ரைனில் சூறையாடிக் கொண்டிருக்கிறது.

ஒருபுறம் சமாதானத்திற்கான தூது இன்னொருபுறம் பீரங்கித் தாக்குதல் என ரஷ்யாவின் இரட்டை வேடம் நம்மை மிரள வைக்கிறது.

உலகத்தில் என்ன நடந்தாலும் கருத்து சொல்லும் இந்திய கம்யூனிஸ்டுகள், தங்களுடைய 14 மாடி கட்டிடத்தில் அமர்ந்து கொண்டு, கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக எப்படிப் போராடுவது என்று கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். கருத்துக்கூற  அவர்களுக்கு நேரமில்லை... இருப்பதற்கும் வாய்ப்பில்லை.

எந்தத் தத்துவமானாலும் அது ஒரு சாமானியனின் உயிரைக் குடிக்கும் என்றால், அந்த தத்துவம் எதுவானாலும் நமக்கு தேவையில்லை என்பதுதான் நமது நிலைப்பாடு.

போர் முடிவுக்கு வர பிரார்த்திப்போம்.

நன்றி

ச.அன்வர் பாலசிங்கம்

ஒருங்கிணைப்பாளர்

ஐந்து மாவட்ட விவசாய சங்கம்

--------------------------------------


Comments

Popular posts from this blog

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு! தேனி, மார்ச்., 07:  தீண்டாமை கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்றுங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்தவிடாமல் சாதிய வன்மத்துடன் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்ற கோரிக்கையுடன் அரண்மனைபுதூர் ஊராட்சி கிராம கமிட்டி தலைவர் பாலசுந்தரராஜ் மற்றும் கோட்டைப்பட்டி கிராம பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  இந்தியா நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளுக்கு மேலாகியும், தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது. தேனி மாவட்டம், தேனி வட்டம், அரண்மனை புதூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைப்பட்டி கிராமத்தில் ஜாதிய தீண்டாமை கொடுமை நடைபெறுகிறது. இங்கு வாழும் பட்டியல் பிரிவிலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படைவசதி திட்டங்களை தடுத்து வருகிறார்கள். கோட்டைப்பட்டி கிராமத்தில் வாழும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச்சேர்ந்த தங்கப்பாண்டி, சுந்தரவடிவேல், செல்வம் உட்பட பத்துபேர்கள் கொண்ட கும்பல் சேர்ந்து தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பொருளாதார ரீதிய...

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு!

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு! சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் முத்துமாரி என்பவர் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.  நேற்று அவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் முத்துமாரி என்பவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்திய கொடுஞ்செயலை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் வன்மையாக கண்டிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் என்பவரையும்,அதற்கு தூண்டுகோலாய் இருந்த கல்லூரியின் பொறுப்பு முதல்வர் நாகநாதனையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலைமுயற்சி, வழக்குப் பதிவுசெய்த...

தேனி உழவர் சந்தையில் 04-01-2025 இன்றைய காய்கறி பழ வகைகளின் விலை விபரம்:

தேனி உழவர் சந்தையில் 04-01-2025 இன்றைய காய்கறி பழ வகைகளின் விலை விபரம்: கத்தரிக்காய் 46,40 தக்காளி 20,15 வெண்டைக்காய் 46,40 கொத்தவரங்காய் 35,30 சுரைக்காய் 20,18,15 புடலங்காய்  26,24 பாகற்காய் 40,32 பீர்க்கங்காய் 40 முருங்கைக்காய்  -- பூசணிக்காய் 20,14,10 பச்சைமிளகாய் உருட்டு 75,70 அவரைக்காய் (பட்டை) -- தேங்காய் கிலோ 60 சம்பா மிளகாய் -- நைஸ் அவரை -- பெல்ட் அவரை 110 திராட்சை 80 மலை உருளைக்கிழங்கு 45 உருளைக்கிழங்கு பெங்களூர் 35 உருளைக்கிழங்கு ஆக்ரா 35 கருணைக்கிழங்கு 65 சேனை 45 மரவள்ளி கிழங்கு -- வெ.வ.கிழங்கு 55 கறிவேப்பிலை 60 கொத்தமல்லி 30 புதினா 35 சின்னவெங்காயம் 80,75 பெரியவெங்காயம் பழையது -- பெரிய வெங்காயம் புதியது 45,40 இஞ்சி பழையது -- இஞ்சி புதியது 45 வெள்ளைப்பூண்டு 340,300,280 வாழையிலை ஒரு மடி 25,20 வாழைப்பூ ஒன்றுக்கு 10 வாழைத்தண்டு ஒன்றுக்கு 10 வாழைப்பழம் 60,40,30,25 வாழைக்காய் 25 ஆரஞ்சு 260 பீட்ரூட் 65 நூல்கோல் 40 முள்ளங்கி 22,18 முருங்கைபீன்ஸ் 90,70 பட்டர்பீன்ஸ் 170,150 சோயாபீன்ஸ் -- ரிங்பீன்ஸ் 75 முட்டைகோஸ் 28 கேரட் ஊட்டி 66,50 கேரட் கொடைக்கானல் 36,30 டர்னிப் 40 சவ்சவ் ...