முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் என்ன நடக்கிறது?.. ஐந்து மாவட்ட விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கேள்வி!
முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் என்ன நடக்கிறது...?
தமிழகப் பொறியாளர்கள் யாரிடம் அனுமதி பெற்று செயல்படுகிறார்கள்...?
அணை கேரளாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா, அல்லது தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா...?
என்பதோடு அடுக்கடுக்கான பல கேள்விகளை நம் முன் வைக்கிறார் ஐந்து மாவட்ட விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம்.. அவரின் அறிக்கை இதோ:
கடந்த வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் கேரள சட்டமன்றத்தில் பேசிய அம்மாநில நீர்வளத் துறை அமைச்சரும், இடுக்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான, கேரள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரோசி அகஸ்டின் அவர்கள்,
முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டிற்கு என்று தனி செயற்பொறியாளர் இருக்கிறார். ஆனால் கேரளாவுக்கு இல்லை. இதனால் அணையில் நீர் வரத்து, நீர் வெளியேற்றம் உள்ளிட்ட தகவல்களை தமிழகத்திடம் இருந்து கேட்டுப் பெற வேண்டிய தேவை இருக்கிறது. எனவே பெரியாறு அணைப்பகுதிக்குள் கேரள மாநில அரசு, தனி செயற்பொறியாளரை நியமிக்க வேண்டும் என்று திருவாய் மலர்ந்தருளினார்.
ரோசி அகஸ்டினின் இந்த உரை கண்டிப்பாக மாநில அரசின் அனுமதி பெற்றுத்தான் இருந்திருக்க வேண்டும்.
தமிழகத்தின் கட்டுப்பாட்டில் அணை முழுமையாக இருக்கிறது என்று தெரிந்தும், ஒரு மாநில அமைச்சரே இந்த உரையை நிகழ்த்துகிறார் என்றால், சர்வாதிகாரத்தை நோக்கி கேரளா பயணிக்கிறதா என்கிற கேள்வியும் எழுகிறது.
அதற்கு அடுத்த நாள், அதாவது சனிக்கிழமை அன்று காலையில், தேனி மாவட்ட நிர்வாகத்தின், குறிப்பாக தேனி மாவட்ட ஆட்சியரின் எவ்வித அனுமதியும் இன்றி, கேரளா அரசின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக வாதாடும் வழக்கறிஞர் ஜெ.பி.குப்தா, கேரள மாநில நிலைக்குழு வழக்கறிஞர் பிரகாஷ், கேரள மாநில நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ், இடுக்கி மாவட்ட நீர்வளத்துறை பொறியாளர் பிந்து, மற்றும் செயற்பொறியாளர் ஹரிகுமார் உள்ளிட்ட அதிகாரிகள், திடீரென வல்லக்கடவு வழியாக முல்லைப் பெரியாறு அணைக்கு வந்து, மெயின் அணைப் பகுதியையும், ஷட்டர் பகுதிகளையும் பார்வையிடுகிறார்கள்.
நடந்தது இதுதான்...
ஆனால் தமிழக பத்திரிக்கையாளர்களிடம் கூறப்பட்ட செய்தி என்னவென்றால்...
கேரள மாநில நீர்வளத் துறை முதன்மை பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் அவர்களும், செயற்பொறியாளர் திரு ஹரிகுமார் அவர்களும், சில அதிகாரிகளும் அணைப் பகுதிக்கு வந்து பார்வையிட்டு விட்டு சென்றார்கள் என்பதாக இருந்தது.
இதற்கிடையில் மூன்றாவதாக ஒரு செய்தியையும் அணைப்பகுதி தமிழக பொறியாளர்கள் சொல்லி வருகிறார்கள்.
ராபதி முல்லைப்பெரியாறு அணையில் தமிழக பொதுப்பணித்துறை செய்ய வேண்டிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக... கேரள அரசிடம் அனுமதி கோரி இருந்ததாகவும், அந்த அடிப்படையில் கேரள மாநில பொறியாளர்கள் வந்து பார்வையிட்டு சென்றதாகவும் தகவல் கூறப்படுகிறது.
முல்லைப் பெரியாறு அணைப்பகுதிக்குள் என்ன நடக்கிறது என்று நம்மால் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை.
தமிழக பொறியாளர்கள் அணைப் பகுதிக்குள் பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டுமானால், தேனி மாவட்ட நிர்வாகத்திற்கோ அல்லது தமிழக பொதுப்பணித் துறைக்கோ தகவல் கொடுத்தார்களா என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
அப்படியே தமிழக பொறியாளர்கள் கேரள மாநில அரசுக்கு பராமரிப்பு பணிகள் தொடர்பாக விண்ணப்பித்திருந்தாலும், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜெ.பி.குப்தா அவர்கள், அணைப் பகுதிக்குள் வரவேண்டிய தேவை எங்கே வந்தது என்கிற கேள்வியும் பிறக்கிறது.
போகிற போக்கில் கேரளாவைச் சேர்ந்த எவர் வேண்டுமானாலும் அணைப்பகுதிக்குள் நுழைந்து விட முடியுமா...?
| ச. அன்வர் பாலசிங்கம் |
ஐந்து மாவட்ட சங்கத்திற்கு எழுந்திருக்கும் சந்தேகங்களை தீர்க்க வேண்டிய கடமை அணைப் பகுதியில் இருக்கும் தமிழக பொறியாளர்களுக்கு கண்டிப்பாக இருக்கிறது.
1-உங்களுடைய வேண்டுகோளை ஏற்றுத்தான், அணைப்பகுதிக்குள் கேரள மாநில அதிகாரிகளும், வழக்கறிஞர்களும் வந்தார்களா...?
2-உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜெ.பி.குப்தா மற்றும் கேரள மாநில நிலைக்குழு வழக்கறிஞர் பிரகாஷ் ஆகியோர், அணைப் பகுதிக்குள் வந்த தகவலை நீங்கள் யாருக்கு தெரிவித்தீர்கள்...?
3-முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்கிற உங்களது முடிவை, தேனி மாவட்ட நிர்வாகத்திற்கோ அல்லது பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்திற்கோ எழுத்துப்பூர்வமாக தெரிவித்தீர்கள் என்றால் அதற்கான கடித நகல் இருக்கிறதா...?
4-கேரள மாநில நீர்ப்பாசனத்துறை தலைமை பொறியாளருக்கோ அல்லது அது சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கோ நீங்கள் எழுதிய கடிதத்தின் நகல் இருக்க வேண்டும்.
5-கடந்த சனிக்கிழமை கேரள மாநில அதிகாரிகளும்,வழக்கறிஞர்களும், அணைப் பகுதிக்குள் வந்து விட்டுச் சென்றவுடன், நீங்கள் தேனி மாவட்ட ஆட்சியருக்கோ அல்லது பொதுப்பணித்துறை தலைமை பொறியாளருக்கோ தகவல் தெரிவித்தீர்களா...?
6-அணைப் பகுதிக்குள் அத்துமீறி வந்து பார்வையிடும் கேரள மாநில அதிகாரிகளின் வருகை பதிவேட்டை பராமரிக்கிறீர்களா என்று தெரிய வேண்டும்.
7-டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை அணைப் பகுதிக்குள் வந்து சென்ற கேரள மாநில அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் பட்டியல் வருகைப் பதிவேட்டில் பதிவாகி இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துங்கள்.
மேலாக கடந்த சனிக்கிழமை அணைக்குள் வந்தது யார்,
அவர்களுடைய நோக்கம் என்ன,
ஒரு வழக்கறிஞருக்கு அணைக்குள் என்ன வேலை,
தமிழக பத்திரிகையாளர்களுக்கு முறையாக ஏன் தகவல் தெரிவிக்க மறுக்கிறீர்கள்,
மாறுபட்ட தகவல்களை அளிக்க வேண்டிய நிர்பந்தம் எதுவும் உங்களுக்கு இருக்கிறதா,
என்கிற பல்வேறு கேள்விகளுக்கும் விடை அளிக்க வேண்டியது முல்லைப் பெரியாறு அணைக்குள் பணியாற்றும் தமிழக பொறியாளர்கள்தான்...
பிரதான அணையையும் ஷட்டர் பகுதிகளையும் பார்வையிடுவதற்கு ஒரு வழக்கறிஞரை நீங்கள் அனுமதித்தது எதில் போய் முடியும் என்று உங்களுக்கு தெரியுமா...?
சரியான பதிலை மாவட்ட நிர்வாகத்திற்கு நீங்கள் வழங்க வேண்டும்.
இல்லையேல் உங்களை எதிர்த்துதான் போராட வேண்டிய அவசியமும் தேவையும் எங்களுக்கு ஏற்படும் என்பதை ஐந்து மாவட்ட விவசாயிகளின் சார்பில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
Comments
Post a Comment