உச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை - 5 மாவட்ட விவசாய சங்கம்!!
முல்லைப்பெரியாறு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என 5 மாவட்ட விவசாய சங்கம் தெரிவித்துள்ளது. அதன் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தெரிவிக்கையில்,
நாட்டின் உயர்ந்த நீதி பரிபாலன அமைப்பை எதற்காக ஐந்து மாவட்ட விவசாய சங்கம் கேள்விக்கு உள்ளாக்குகிறது என்று நினைப்பவர்கள் மட்டும் இதை வாசியுங்கள்.
உச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இல்லை. ஆனால் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான அதனுடைய தீர்ப்புகள் இரண்டு முறை தெளிவாக கூறப்பட்ட பின்னரும், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வாழும், பத்து லட்சம் விவசாயிகளுக்கான நீதி மறுக்கப்படுகிறதே என்கிற ஆதங்கத்தில் தான் இதை எழுதுகிறேன்.
இதோ உடையப் போகிறது அதோ உடையப் போகிறது என்று முல்லைப் பெரியாறு அணையை குறித்து வதந்தி எழுப்பப்பட்டு, கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.
கடந்த 23-10-1979 ம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக, மலையாள மனோரமா (தினசரி) பற்ற வைத்த வதந்தி, அணையா பெருநெருப்பாக இன்றுவரை கொழுந்துவிட்டு கேரள மாநிலம் முழுவதும் பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது.
காசர்கோடு முதல் கன்னியாகுமரி பாறசாலை வரை இதைப்பற்றி பேசாத மலையாள வாய்கள் இல்லை...
இடுக்கி அணை
ஒருவேளை 1976 ல் இடுக்கி அணையை, அதாவது முல்லைப் பெரியாறு அணையை விட 7 மடங்கு அதிகமான கொள்ளளவு கொண்ட இடுக்கி அணையை, கேரளா கட்டாமல் போயிருந்தால், முல்லைப்பெரியாறு மீதான வதந்திகளை மலையாளிகள் எழுப்பியிருக்க வாய்ப்பே இல்லை என்று நினைக்கிறேன்..
உள்ளபடியே மலையாள மனோரமாவின் செய்தியின் அடிப்படையில், கேரள சட்டமன்றத்தில் பெரியாறு அணை மீதான நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய அன்றைய பீர்மேடு சட்டமன்ற உறுப்பினரான தோழர் சி. ஏ .குரியனுக்கு, பெரியாறு அணை குறித்த சிக்கலுக்கு விரைவில் நல்ல தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார் அன்றைய கேரள மாநில முதல்வர் தோழர் அச்சுத மேனன். அன்று தொடங்கிய அரசியல் நகர்வுகள், இன்றுவரை விட்டபாடில்லை.
C. Achutha Menon
கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற நினைத்த தோழர் அச்சுத மேனன், அன்றைக்கு தமிழக முதல்வராக இருந்த எம். ஜி. ராமச்சந்திரனை, முல்லைப் பெரியாறு அணை மீதான சிக்கலுக்கு தீர்வு காண, திருவனந்தபுரத்திற்கு வருமாறு பணித்தார். இரண்டு மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் ஒரு நதி நீர் சிக்கலுக்கான தீர்வை நாட்டின் தலைநகரான டெல்லியில் தான் உட்கார்ந்து பேசியிருக்க வேண்டும்.
எம்.ஜி. இராமச்சந்திரன்ஆனால் மரபுகளை மீறிய அன்றைய தமிழக முதல்வர் எம் ஜி ஆரும், திருவனந்தபுரத்திற்கு சென்று, அம்மாநில முதல்வரான தோழர் அச்சுத மேனனை சந்தித்து, 25- 11- 1979 அன்று ஒரு ஒப்பந்தத்தையும் போட்டுக்கொண்டார். இந்த உடன்பாட்டுக்கு மத்தியஸ்தம் செய்தது அன்றைக்கு மத்திய நீர்வள கமிட்டியினுடைய தலைவராக இருந்த மலையாளியான பொறியாளர் கே.சி. தாமஸ்.
Dr. K.C. Thomasஒப்பந்தப்படி முல்லைப் பெரியாறு அணையில் மூன்று கட்ட மராமத்து பணிகள் செய்து முடித்தபின், அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்பதாகும்.
புத்திசாலித்தனமாக ஒப்பந்தத்தினூடாக முல்லைப் பெரியாறு அணையில், மீன் பிடிக்கும் உரிமை, படகு விடும் உரிமை, காவல் உரிமை உள்ளிட்ட ஏழு வகையான உரிமைகளை, தமிழகத்திடம் இருந்து கேரளாவிற்கு தந்திரமாக கை மாற்றினார் கேரள முதல்வர் தோழர் அச்சுத மேனன்.
அன்றைக்கு தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்த அண்ணன் ராஜாமுகமது போன்ற மானஸ்தர்கள், மலையாளிகளின் தந்திரத்திற்கு பணியாமல், ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து தமிழகம் திரும்பினர். துரதிஷ்டவசமாக அன்றைக்கு தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருந்தவரும் ஒரு மலையாளியே.
முல்லைப் பெரியாறு அணையில், இரு மாநில முதல்வர்களின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பராமரிப்பு பணிகள் ஆரம்பித்தது.
மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக இருந்த திரு. தாமஸ் அவர்கள் அணையை பார்வையிட்டு,
நீர் வடிகட்டிகள் அமைக்கவும்
டிரைனேஜ் காலரி வைக்கவும்
வெள்ளம் வடிந்து ஓட வசதியாக மூன்று கண் மதகுகள் கட்டவும் வலியுறுத்தி விட்டுச் சென்றார்.
அந்த அடிப்படையில் நவீன தொழில்நுட்பத்தில் அணை கவனமாக புதுப்பிக்கப்பட்டுள்ளதை, இன்றுவரை திட்டமிட்டு மறுத்து வருகிறது கேரள மாநில அரசு.
மத்திய நீர்வள ஆணையத்தின் பரிந்துரைப்படி, 1980 முதல் 1994 வரை மூன்று முறை, மிகச் சிறந்த பராமரிப்பு பணிகளை, தமிழக அரசு கவனமாக மேற்கொண்டிருக்கிறது.
அதன்படி
24 அடி அகலம், 3 அடி உயரத்தில், 1200 அடி நீளத்திற்கு 12,000 டன் எடையுள்ள கான்க்ரீட் போடப்பட்டு அணை பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதுபோல அணையின் பின்புறம் தாங்கு அணையாக, 135 அடி உயரத்தில், 1700 அடி நீளத்தில், 33 அடி அகலத்தில்,3 லட்சம் டன் கான்கிரீட் கொண்டு பிணைக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படுகிறது என்கிற வதந்தியை உடைப்பதற்காக, அணையில் 1,200 அடி நீளத்தில், ஒன்பது அடி இடைவெளி விட்டு,4 அங்குல விட்டத்தில், 95 துளைகள் இடப்பட்டு, அதிலிருந்து கம்பிகளை இழுத்து, அணையின் கீழ்மட்டத்தில் 30 அடிக்கு கீழே உள்ள பாறைகளின் உள்ளே சொருகி, அதை கான்கிரீட் கலவையைக் கொண்டு உறுதிப்படுத்தி, 20 டன் எடையை தாங்கும் அளவிற்கு முறுக்கிவிடப்பட்டுள்ளது.(இதனால் அணைப் பகுதியில் 4.5 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானால் கூட, எவ்வித ஆபத்தும் நேராது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று)
இதுபோக பேபி அணையை பலப்படுத்தும் வேலை மட்டுமே பாக்கியிருக்கிறது என்பதை மலையாள சகோதரர்கள் உணர வேண்டும்.
அணையை பலப்படுத்த நடந்த மூன்று கட்ட வேலைகளும், மொத்தமுள்ள வேலையில் கிட்டத்தட்ட 85 விழுக்காடு என்பதை மறந்து விடாதீர்கள்.
இந்தப் பலப்படுத்தும் வேலையை பார்வையிட்ட மத்திய நீர்வள ஆணைய உறுப்பினர்கள்,அணை புதுப்பொலிவுடன் விளங்குவதாகவும், தெளிவான முறையில், நவீன கட்டுமானத்துடன் பலப்படுத்தப் பட்டதாகவும் சொன்ன செய்தி, நீர்வள ஆணைய அலுவலக குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதுபோக டி.கே. மித்தல் கமிட்டி மற்றும் எஸ். எஸ். பிரார் கமிட்டி அறிக்கையும், அணை பலமாக உள்ளதாகவே அறிவிப்பு செய்திருக்கிறது.
ஆனால் அணை பலப்படுத்தும் வேலை நடந்து கொண்டிருக்கும் காலகட்டத்திலேயே, கேரளாவின் முதல்வராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே. கருணாகரன்,1993ஆம் ஆண்டு முதல் தீர்மானமாக, முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை வேண்டும் என்கிற தீர்மானத்தை கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றினார்.
K.Karunakaranஇத்தனை வேலைகளை தமிழக அரசு செய்து முடித்த பின்னரும், இடுக்கி அணைக்கு வர வேண்டிய தண்ணீரை குறித்து சிந்தித்தார்களே தவிர, இந்த முல்லைப்பெரியாறு அணை தண்ணீரை நம்பி இருக்கும் பத்து லட்சம் விவசாயிகளை பற்றி யாரும் சிந்திக்க தயாராக இல்லை.
பேபி அணையை பலப்படுத்தி விட்டால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 1979 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில், 152 அடியாக உயர்த்த வேண்டுமே என்கிற பயம்தான் கேரளாவை பற்றி பிடித்துக் கொண்டிருக்கிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டால், அணையின் நீர்தேங்கும் பகுதிகளில் கேரள அரசியல்வாதிகள் அத்துமீறி கட்டி இருக்கும் நூற்றுக்கணக்கான மாட மாளிகைகள் தண்ணீரில் மூழ்கிவிடும் என்பதால், கேரளா பிடிவாதம் செய்கிறது என்பதை உச்ச நீதிமன்றம் உணர வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை வேண்டும் என்று கருணாகரன் இயற்றிய முதல் தீர்மானத்தை வழிமொழிந்து, இரண்டாவது தீர்மானத்தை நிறைவேற்றியது மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அமைச்சரான தோழர் வி. எஸ் .அச்சுதானந்தன்
இத்தனை பலப்படுத்துதல்கள், 2 கமிட்டி அறிக்கைகள், மத்திய நீர்வள ஆணையத்தின் நற்சான்று என எல்லாவற்றையும் ஆய்வு செய்துதான், 26- 2- 2006 அன்று முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் அறிவித்தது.
எப்படியாவது முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்கிற கருணாகரனின் கனவை நனவாக்க துணிந்த திரு. உம்மன் சாண்டி, உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான நான்கு நாட்களிலேயே, கேரளா சட்டமன்றத்தைக் கூட்டி கேரள பாசன மற்றும் நீர் பாதுகாப்பு மசோதா 2006 நிறைவேற்றினார்.
Umman Chandyஇந்த மசோதா சொல்ல வந்த செய்தி... கேரள மாநிலத்திற்குள் இருக்கும் எந்த அணையானாலும், அதன் நீர்மட்டத்தை குறைப்பதோ கூட்டுவதோ மாநில அதிகாரத்தின் கீழ் வருமென்று வரையறை செய்தது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே மறுவரையறைக்குள் உட்படுத்திய கேரள மாநில அரசை, உச்சநீதிமன்றம் கேள்வி கேட்காமல் விட்டதன் விளைவு... அடுத்த தீர்ப்பை 2014 ஆம் ஆண்டு சொல்ல வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.
தனிச் சட்டம் இயற்றிய கையோடு கேரளா சும்மா இருக்கவில்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அரசியல் சாசன அமர்வுக்கு சென்றது..
தன்னுடைய
தீர்ப்பை அமல்படுத்தாத நிலையில், அரசியல் சாசன அமர்வுக்கு வந்து நின்ற கேரளாவின் ஜனநாயக பண்பை மதித்து, பெரியாறு அணையின் பலம் குறித்த அறிக்கையை வழங்குமாறு
நீதியரசர்கள்
ஏ.எஸ்.ஆனந்த்
தமிழகத்தின் சார்பில் நீதியரசர் ஏ. ஆர். லட்சுமணன்
கேரளாவின் சார்பில் நீதியரசர் கே. டி. தாமஸ்
அடங்கிய மூவர் குழுவை நியமித்தது உச்சநீதிமன்றம்.
மூவர் குழுவில் கேரளாவின் சார்பில் அங்கம் வகித்த நீதியரசர் கே டி தாமஸ், பெரியாறு அணைக்கு கீழே தனக்கு 5 ஏக்கர் நிலம் வழங்குமாறும், அங்கு வீடு கட்டி தான் விவசாயம் செய்யப் போவதாகவும், அப்படியாவது மலையாளிகளுடைய அச்சம் தீருமா என்று பார்க்கப் போவதாகவும் அறிக்கை விட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
மூவர் குழு ஆய்வுக்குப் பிறகு, அன்றைக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ஏ. கே. அந்தோணி அனுப்பிவைத்த கடற்படை வல்லுனர்களை கொண்ட அணை ஆய்வு, சி.டி.தத்தே, டி.கே.மேத்தா போன்ற உலகத்தின் தலைசிறந்த நீரியல் நிபுணர்களைக் கொண்ட அணை ஆய்வு என 14 வகையான ஆய்வுகளின் அடிப்படையில் 27-05-2014 அன்று மறுபடியும் ஒரு தெளிவான தீர்ப்பை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியது.
2006 மற்றும் 2014 ஆகிய இரண்டு தீர்ப்புகளின் ஒட்டுமொத்த சாராம்சமும், பேபி அணையைப் பலப்படுத்தி விட்டு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்பதாகும்.
இந்தத் தீர்ப்பையும் கேரளா மதிக்கவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
2006 ல் உச்சநீதிமன்றம் கொடுத்த முதல் தீர்ப்பு, அரசியல் சாசன அமர்வு கொடுத்த வழிகாட்டு நெறிமுறைகள், 2014 ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கொடுத்த இரண்டாவது தீர்ப்பு, மத்திய நீர்வள ஆணையத்தின் வழிகாட்டுதல்கள், நீரியல் நிபுணர்களின் அறிக்கைகள், 2011ஆம் ஆண்டு கேரள உயர்நீதிமன்றத்தில் கேரள மாநில அட்வகேட் ஜெனரல் கே.பி. தண்டபாணி கொடுத்த அறிக்கை என அத்தனையையும் புறந்தள்ளிவிட்டு தோழர் பினராயி விஜயன் கடந்த 2018 ஆம் ஆண்டு, முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்ட வேண்டும் என்கிற தீர்மானத்தை மூன்றாவது முறையாக கேரள சட்டமன்றத்தில் முன்மொழிந்து வழிமொழிந்தார்.
அதே ஆண்டு கேரள மாநிலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம், பேரழிவு இவற்றிற்கெல்லாம் காரணம் முல்லை பெரியாறு அணைதான் என்ற அபாண்டமான குற்றச்சாட்டை, மாநிலம் முழுவதும் உச்சரிக்க வைத்ததும் சாட்சாத் இதே தோழர் பினராயி விஜயனின் அரசுதான்.
1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பீர்மேடு தாலுகாவில் உள்ள தமிழர்கள் நிறைந்து வாழும் மஞ்ச மலையில், பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கான பூர்வாங்க வேலைகளை தொடங்கி, மத்திய வனத்துறைக்கு விண்ணப்பித்த பினராயி விஜயன் அரசுக்கு முதல் வெற்றி கிட்டியது.
ஆம் கடந்த 2018 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தாக்கல் செய்யச் சொன்னது மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம்.
பன் மாநில நதி என்கிற அடையாளத்தை மத்திய நீர்வள ஆணையத்தின் பட்டியலிலிருந்து எடுத்து விட துடிக்கும் கேரள மாநில அரசு,தன்னுடைய மாநிலப் பட்டியலில் முல்லைப்பெரியாறை மாநில நதி என்று வகைப்படுத்தி நரித்தனத்தை காட்டியிருக்கிறது.
கடந்த 2000 மாவது ஆண்டில் இருந்து தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் தமிழக அரசு, தலைவர் அப்பாஸ் தலைமையிலான அன்றைய ஐந்து மாவட்ட விவசாய சங்கம், தொடர்ந்து அதற்காகப் போராடிக் கொண்டிருக்கும் நாங்களெல்லாம் சோர்ந்து கிடக்கும் நிலையில், உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் வழங்கிய தீர்ப்பு...
அதாவது முல்லைப் பெரியாறு அணையில் கேரளா ஏதாவது தமிழகத்திற்கு இடைஞ்சல் செய்தால் உச்சநீதிமன்றத்தை அணுகலாம்...
தேவைப்பட்டால் கேரளாவின் தலைமைச் செயலாளருக்கே நோட்டீஸ் அனுப்புவோம்...
என்கிற உயர்ந்த வாசகங்கள் அடங்கிய தீர்ப்பை, எங்களால் அவ்வளவு எளிதாக உள்வாங்க முடியவில்லை.
ஏனென்றால் கேரளத்தை ஆண்டு விட்டுப்போன முதல்வர்களான
அச்சுத மேனன், பி.கே. வாசுதேவன் நாயர்,ஈ.கே. நாயனார், கருணாகரன்,ஏ.கே. அந்தோணி, உம்மன் சாண்டி, வி.எஸ்.அச்சுதானந்தன், தற்போது ஆண்டு கொண்டிருக்கும் பினராயி விஜயன் வரை, எங்களுக்கு அவர்கள் கற்றுக் கொடுத்தது எல்லாம் வெறும் பாடம் மட்டுமல்ல, மறக்க முடியாத அனுபவங்களும்தான்.
திரும்பும் திசையெல்லாம் கேரள மாநிலம் முழுவதும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது Decommission mullaperiyar என்கிற மாபெரும் முழக்கம்.
அடையாளம் காணப்பட்ட இடதுசாரிகள் முதல், நூற்றுக்கணக்கான காங்கிரஸ் கட்சிகளிலிருந்து, கத்துக்குட்டி அரசியல் கூமுட்டைகளெல்லாம்,வகை தொகையின்றி கத்திக் கொண்டிருக்கிறது முல்லைப் பெரியாறு அணையை உடைப்போம் என்று...
பாதர் ஜோய் நிரப்பல், ஜோன்ஸ் பெருவந்தானம்,சி.ஏ.குரியன், கே.கே. ஜெயச்சந்திரன், தேவிகுளம் ராஜேந்திரன், ஏலப்பாறை பிஜுமோள் உள்ளிட்ட பெரியாறு அணையை உடைக்க கிளம்பிய, பழைய சண்டியர்கள் எல்லாம் காணாமல் போய் விட்ட நிலையில், வாழூர் சோமன்,உடும்பஞ்சோலை மணி, தொடுபுழா பி.ஏ.ஜோசப், இடுக்கி அகஸ்டின்,ஜோ ஜோசப், எர்ணாகுளம் ஜார்ஜ், வழக்கறிஞர் ரசல் ஜோய், கொல்லம் என். கே.பிரேமச்சந்திரன் உள்ளிட்ட நிகழ்கால சண்டியர்கள் களத்திலே நின்று களமாடிக் கொண்டிருக்கிறார்கள்.
கங்கை வென்று, கடாரம் கொண்டு, கானக ஈழம் வரை நாடு கண்ட நாங்கள் தம்மாத்துண்டு கேரளாவை கண்டு மலைத்து நிற்கிறோம்.
ரப்பரையும், மிளகையும் தவிர்த்து, அத்தனை வகையான அன்றாடப் பொருட்களையும், வண்டி வண்டியாக பதினோரு வழிகளின் வழியாக அனுப்பி வைக்கும் நாங்கள், கைகட்டி வாழாயிருக்கிறோம்.
வாழ்வா சாவா என்கிற ஜீவ மரணப் போராட்டத்தில் 10 லட்சம் விவசாயிகள் பெரியாறு அணையை நோக்கி காத்துக்கிடக்கிறோம்.
கேரளாவில்
யாருக்காவது ஒருவருக்கு நல்ல புத்தியைக் கொடுத்து விடேன் என்கிற குலதெய்வத்தை நோக்கிய எங்களுடைய வேண்டுதல், ஒருநாள் பலிக்கலாம், பலிக்காமலும் போகலாம்.
நிலைமை கைமீறினால் புளியங்காய் பறிக்க நின்று கொண்டிருக்க மாட்டோம் என்பதை மட்டும் மலையாளிகளுக்கு எச்சரிக்கையாக தெரிவித்து முடிக்கிறேன் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அலைபேசி-9789379077













Comments
Post a Comment