தமிழர் இழந்த நகரங்கள்- 2 -மறையூர்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையிலிருந்து மூணாறு செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது மறையூர் எனும் அழகிய நகரம். பழனிமலை குன்றில் அமைந்திருக்கும் இந்த மறையூர் நகரம், வரலாற்று தரவுகளின் அடிப்படையில், கேரளாவிற்கு சென்றதே மிகப்பெரிய தவறு.
மறையூருக்கு இன்னொரு துணைப்பெயரும் இருக்கிறது. மறையூர் அஞ்சு நாடு என்பதாகும் அது.
அதென்ன அஞ்சு நாடு என்பதற்குப் பின்னால் ஒளிந்து கிடக்கிறது... மறையூருக்கு அருகாமை கிராமங்களான, காந்தலூர், கீழாந்தூர், காரையூர், கொட்டகுடி ஆகிய கிராமங்கள். இந்த நான்குடன் மறையூரும் சேர்ந்து அஞ்சு நாடு என்று அழைக்கப்படுகிறது.
எனக்கு நினைவு தெரிந்து என் சித்தப்பா வேலுச்சாமி, கேரள அரசின் நெடுஞ்சாலைத்துறையில் வேலை செய்து வந்தார்கள். அப்பா மாத இறுதியில், தன்னுடைய சம்பளத்தை பெறப் போவது மறையூரில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகத்திற்கு தான். நானும் நிறைய முறை சித்தப்பாவோடு மறையூருக்கு சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் மலையாளத்தில் பேசும் யாரும் அங்கு கிடையாது. அந்த நெடுஞ்சாலை அலுவலகத்தில் பணி செய்யும் அரசு ஊழியர்கள் தான், மலையாளத்தில் பேசக் கேட்டிருக்கிறேன். மற்றபடி சித்தப்பா வாழ்ந்த லக்கத்தில் இருந்து, மறையூருக்கு செல்வதற்கு அன்றைக்கு தமிழக பேருந்துகள் முறையே, சோழன் போக்குவரத்துக்கழக கோவை மண்டல பேருந்துகள், (கோவை- மூணாறு, பழனி-மூணாறு, உடுமலை- மூணாறு என மூன்று வழித்தடங்கள்) எஸ் எஸ் கே எனும் தனியார் பேருந்து (உடுமலைப்பேட்டை யிலிருந்து மூணாறு வரை வரும்).
இதுபோக கேரளாவில் உள்ள ஆலுவா விலிருந்து மறையூர் வழியாக காந்தலூர் வரை, பி.பி.கே மற்றும் பி.எம்.எஸ் என இரண்டு தனியார் பேருந்துகளும் உண்டு. இவைகள்தான் உடுமலைப்பேட்டையையும் மூணாறையும் இணைக்கும் சாலைப் போக்குவரத்து பேருந்துகள்.
கடல் மட்டத்திலிருந்து 1600 அடி உயரத்தில் உள்ள இந்த மறையூர் இன்றைக்கு 12,500 பேரை தன்னகத்தே கொண்டிருக்கிறது. இதில் கிட்டத்தட்ட 1500 மலையாளிகளை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், அத்தனையும் தமிழர்கள்.
மறையூரிலிருந்து மூணாறு செல்லும் சாலையின் இருமருங்கிலும் சந்தன மரங்கள் நிறைந்து கிடக்கிறது. எனக்குத் தெரிந்து கேரள மாநிலத்திலுள்ள ஒரே சந்தன மரக்காடு இந்த மறையூர் காடுதான்.
அப்பர் வாகுவாரையில் பிறப்பெடுக்கும் பாம்பாறு,இந்த மறையூர் அஞ்சு நாட்டை ஊடறுத்துதான், தூவானம் எனுமிடத்தில் பேரருவியாக கொட்டி, மூணாறு- உடுமலைப்பேட்டை சாலையின் தென்புறம் பள்ளத்தாக்கில் வெள்ளிகோட்டை உருக்கி விட்டது போல தாறுமாறாக ஓடி, திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையை வந்தடைகிறது.
ஆதித் தமிழர்களான முதுவாக் குடிமக்களும், அங்கொன்றும் இங்கொன்றுமாக நான்கைந்து குடிகளில் வாழ்ந்து வருகிறார்கள்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூத்துக் குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் நிறைந்து கிடக்கிறது மறையூரைச் சுற்றி...
சமீபகாலமாக தேவிகுளம் தாலுகாவில் தேயிலைத் தோட்டங்களில் பணி செய்யும் தொழிலாளிகள், பணி நிறைவு பெற்றதும், தமிழகத்திலுள்ள தங்கள் பூர்வீக ஊர்களுக்கு செல்வதில்லை. அவர்கள் கிளம்பி வருவது மறையூரை நோக்கித்தான். தேவிகுளம் தாலுகாவில் இருந்து தமிழர்கள் 10 பேர் வந்தால் பெரும்பாவூர், ஆலுவா, கோட்டயம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து 20 மலையாளிகள் மறையூருக்கு வந்து சேர்கிறார்கள்.
வளமான இந்த மறையூரில் சந்தன மரங்கள் புகழ் பெற்றது என்றால், அதற்கு இணையாக இன்னொன்றும் புகழ்பெற்று விளங்குகிறது, அதுதான் மண்டைவெல்லம். மறையூர் மண்டைவெல்லம் கேரளாவெங்கும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.
அங்கு இருக்கும் ஒரே பெட்ரோல் பம்பும், தேவிகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ஏ.கே.மணிக்குச் சொந்தமானது.
இப்படியாக 1990 கள் வரை தமிழர்கள் மட்டுமே உழைத்தும், ஓடியும், வாழ்ந்தும் கிடந்த மறையூர், இன்று கிட்டத்தட்ட மலையாள மயமாக வேகமாக மாறி வருகிறது.
மூணாறுக்கு கிழக்கே மலையாள வாடையே இல்லாமல் இருந்த நிலையில், இன்று அங்கு காலங்காலமாக வாழ்ந்து வரும் தமிழர்களும் மலையாளம் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.
கூரைக்கடைகள் மட்டுமே நிரம்பிக் கிடந்த மறையூரில், இன்று கப்பக்கிழங்கோடு மீன்சாறு விற்கும் கடைகள் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. போதாக்குறைக்கு அங்கொன்றுமிங்கொன்றுமாக ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் என பட்டய பூமிகளை, தமிழர்களிடமிருந்து அடிமாட்டு விலைக்கு வாங்கும் இந்த மலையாளக் கூட்டம், homestay, adventure stay, hud stay என விதவிதமாக, குடிசைகளை அமைத்துக்கொண்டு, மொத்தக் கேரளத்தையும் வசீகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதிலும்
குறிஞ்சி மலர்கள் பூத்து விட்டால், படையெடுத்து வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் டாலர்களை ஆயிரக்கணக்கில் கறந்து கொண்டு கம்பீரம் காட்டுகிறார்கள்.
உணவகங்களில் விலைப்பட்டியலும் கிட்டத்தட்ட மலையாளத்தில் வந்துவிட்டது. அதை வாசிக்க வேண்டும் என்றால் மலையாளம் படித்தாக வேண்டுமே என்கிற நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது தமிழினம்.
பத்தாயிரம் எண்ணிக்கையில் தமிழர்கள் வாழ்ந்தும், மறையூர் பஞ்சாயத்து தலைவராக கிரேசி என்கிற ஒரு மலையாளியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
சமீப காலமாக
சந்தன மரக் காடுகளை காரணங்காட்டி, தமிழர்களை இரவு நேரங்களில் மூணாறை நோக்கியோ, உடுமலையை நோக்கியோ செல்வதற்கு அனுமதிப்பதில்லை கேரள வனத்துறை.
40 ஆண்டுகளுக்கு மேலாக தேயிலைத் தோட்டங்களில் கூலி வேலை பார்த்து கிடைத்த சொற்ப பணத்தைக் கொண்டு, தங்கள் குடிசைகளை அமைத்து மறையூரைச்சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவித் தமிழர்கள் மறையூரை விட்டு கிளம்ப வேண்டிய நேரம் வந்து விட்டதாகவே நினைக்கிறேன்.
காவிரி
நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பில் 30 டிஎம்சி தண்ணீரை வஞ்சகமாக கேட்டுப் பெற்ற கேரளா, இந்த மறையூர் அருகேதான் பாம்பாற்றை மறித்து 3 டிஎம்சி தண்ணீரை எடுப்பதற்காக, பட்டிசேரி எனுமிடத்தில் தடுப்பணை கட்ட போகிறது
3 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஒரு அணை என்றால், கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வீடுகளை அப்புறப்படுத்த வேண்டியதிருக்கும் என்கிற உண்மையை இன்னமும் மறையூர் தமிழர்கள் உணரவில்லை.
தெருவுக்கு தெரு பொல்லாத சாதிக் கொடிக்கம்பங்கள் அநீதியாய் பறந்து கொண்டிருக்கிறது. இழவெடுத்த சாதித் தலைவர்கள் சிலரும் அங்குள்ள மக்களை, பிளவுபடுத்தி கொண்டிருக்கிறார்கள்.
கண் முன்னே தங்களுடைய குடியிருப்புகள் காணாமல் போகப் போகிறது என்கிற எவ்வித அச்சமும் இன்றி வாழ்ந்து கொண்டிருக்கும் மறையூர் தமிழர்களை காக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாகவே நினைக்கிறேன்.
சாதியை மறந்து இனமாக ஒன்றுபடுங்கள் தமிழர்களே என்று இறைவனைப் பிரார்த்தித்து முடிக்கிறேன். நீங்களும் பிரார்த்தியுங்கள்...தோழமைகளே...
பயணம் தொடரும்...
ச.அன்வர் பாலசிங்கம்
ஒருங்கிணைப்பாளர்
ஐந்து மாவட்ட விவசாய சங்கம்.







So Anwar means tamil Gracy means malayali gth ஆஷாலஸ்
ReplyDeleteSelect tamil Christian perhaps
தமிழில் எழுதினால் பதில் தருவேன்.
DeleteForget religion also and broaden your mind to accept Christians
ReplyDelete