தமிழர் இழந்த நகரங்கள்- 3 மூணாறு
மலையாள மயமான தமிழர் பெருநகரம்
ஆங்கிலத்தில் Munnar என்றும், அழகுத் தமிழில் மூணாறு என்றும் அழைக்கப்படும் தமிழர் நகரம், மதுரை மாவட்டத்தில் பெரியகுளம் தாலுகாவில் உள்ளடங்கி இருந்த ஒரு பகுதி. 1956 மொழிவழி பிரிவினைக்கு பின்னால், கேரளாவில் உள்ள கோட்டயம் மாவட்டத்திற்கு சென்றுவிட்டது. மாவட்ட பிரிவினையில் அது இடுக்கி மாவட்டத்திற்குள்ளடங்கிய ஒரு பகுதியாக இன்று மாறிவிட்டது.
பெயருக்குத்தான் தேவிகுளம் ஒரு தாலுகா தலைநகரமே தவிர, மற்றபடி மூணாறு தான் தேவிகுளத்திற்கான அடையாளம்.
குட்டியாறு, கன்னியாறு, நல்லதண்ணி யாறு என மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்திருப்பதால் மூன்றாறு ஆகி, பின்னர் அதுவே காலப்போக்கில் மூணாறாக மருவி விட்டது.
1871 ஆம் ஆண்டு, மூணாறு அருகே உள்ள பார்வதி மலை என்னும் இடத்தில்தான், முதல் தேயிலைச் செடி நடப்படுகிறது. அந்தத் தேயிலைச் செடியை நட்டவளின் பெயர் பார்வதி என்பதால், அந்தப்பகுதியின் பெயரே பார்வதி மலை என்றாகிவிட்டது.
(எங்கே இந்த தமிழர்கள் பார்வதி மலையை சொந்தம் கொண்டாடி விடுவார்களோ என்ற பயத்தில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னால், அந்த மலையை கிளைடர் பயிற்சி நிலையமாக மாற்றிவிட்டது கேரள மாநில அரசு).
அன்றிலிருந்து கிட்டத்தட்ட 140 ஆண்டுகளாக, மூணாறு நகரை சுற்றி தேயிலைத் தோட்டங்களில், கம்பெனி கொடுக்கும் சொற்ப கூலிக்காக, தொழிலாளிகளாக பணிபுரிந்து வருகிறார்கள் அப்பாவித் தமிழர்கள்.
சர் தாமஸ் மன்றோ என்கிற பிரிட்டிஷ் வியாபாரியால் தொடங்கப்பட்ட, மூணாறை சுற்றியுள்ள தேயிலை தோட்டங்கள், பலருக்கு கை மாறி, தற்போது இந்தியாவில் கார்ப்பரேட்தனத்தை தொடங்கிவைத்த முதலாளியான, ரத்தன் டாடா வின் கைவசம் இருக்கிறது. லாக்காடு, சின்னகானல் போன்ற எஸ்டேட்டுகள், ஹாரிசன் மலையாளம் லிமிடெட் கட்டுப்பாட்டிலும் இருக்கிறது.
1970 ம் ஆண்டு வரை, இந்த பூமியில் மலையாளிகளின் வாடை கூட கிடையாது. ஆனால் இன்று மூணாறு நகரம் கிட்டத்தட்ட மலையாளிகளின் கைக்கு சென்று விட்டது என்றே சொல்லலாம்.
டாடா நிர்வாகத்தில் தலைமைப்பதவி, தொழிற்சங்கங்களில் தலைமைப்பதவி, அரசு நிர்வாகத்தில் தலைமைப்பதவி, வர்த்தகத்தில் தலைமைப்பதவி, பொருளாதார ரீதியாகவும் தலைமைப்பதவி என மலையாளிகள் மூணாறை கிட்டத்தட்ட கையகப்படுத்தி விட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.
140 ஆண்டுகளாக இந்த மலையகங்களில் மைனஸ் 4 டிகிரி குளிரில் வாழ்ந்து தொலைத்து, இந்த பூமியை உருவாக்கியவர்கள் இன்னமும் 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பிரிட்டிஷ்காரன் கட்டிக்கொடுத்த கம்பெனி வீடுகளில் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
உழைப்பு இருந்தும், அறிவு இருந்தும், ஆளுமை இருந்தும் நிலம் கைமாறியதால், அடிமையாக வாழ வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
1952 லிருந்து இன்று வரை மாறாத ஒன்று, அங்குள்ள சட்டமன்ற உறுப்பினர் பதவி.என்.கணபதி காலத்தில் ஆரம்பித்து,இன்றைக்கிருக்கும் ராஜா வரை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தமிழர்கள்தான். கேரள மாநிலத்தில் உள்ள 140 சட்டமன்ற தொகுதிகளில், அங்கு வாழும் 50 லட்சம் தமிழர்களுக்கான ஒரே பிரதிநிதி இப்போதைக்கு இந்த ராஜா மட்டும்தான்.
தேவிகுளம் தாலுகாவில் இருக்கும் அத்தனை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான சரணாலயமும் இந்த மூணாறு தான். மறையூர்-உடுமலை சாலையில் உள்ள 22 க்கும் மேற்பட்ட எஸ்டேட்டுகள், மூணாறு-போடி சாலையில், பூப்பாறை வரை உள்ள 18 க்கும் மேற்பட்ட எஸ்டேட்டுகள், மூணாறில் இருந்து வட்டவடை- கோவிலூர் செல்லும் வழியில் உள்ள 26 க்கும் மேற்பட்ட எஸ்டேட்டுகள், மாங்குளம் செல்லும் வழியில் உள்ள 16 க்கும் மேற்பட்ட எஸ்டேட்டுகள், நல்லதண்ணி சாலை வழியாகச் செல்லும் கடலாறு, நடையாறு, குருமலை உள்ளிட்ட 6 க்கும் மேற்பட்ட எஸ்டேட்டுகள், பள்ளிவாசல் வழியாக அடிமாலி செல்லும் சாலையில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட எஸ்டேட்டுகள் என பரந்து விரிந்து கிடக்கும் தேயிலை தோட்ட பூமியில் வாழும் அத்தனை மக்களுக்கும் மூணாறுதான் தாய்க் கிராமம்.
இந்த மூணாறு முழுக்க முழுக்க தமிழர் வர்த்தகத்தை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு நகரம். அங்கு எப்படி மலையாளிகள் வந்தார்கள், வென்றார்கள் என்பதுதான் புரியாத புதிராக இன்றுவரை இருக்கிறது.
மூணாறு நகரத்தின் வர்த்தக சங்கத் தலைவர் பாபுலால் என்கிற மலையாளி என்பதில் தொடங்குகிறது அவர்களுடைய பேராதிக்கம்...
நகரில் இருக்கும் 3 பெட்ரோல் பம்புகளில், இரண்டு தமிழர்களுக்குச் சொந்தமானது. மூன்றில் பெரிய பெட்ரோல் பம்ப், சேலைக்கல் கிருஷ்ணன் என்கிற மலையாளிக்கு சொந்தமானது.
முன்னாள் எம் எல் ஏ கணபதி மகனுக்கு சொந்தமான என் ஜி ரிசார்ட் உள்ளிட்ட நான்கைந்து தங்கும் விடுதிகளே தமிழர்களுக்கு சொந்தமானதாக இருக்கிறது. மற்றபடி தடுக்கி விழும் இடத்தில் எல்லாம் முளைத்து எழுந்திருக்கும் ரிசார்ட்டுகள் எல்லாம் முழுக்க முழுக்க மலையாளிகளுக்கு சொந்தமானது.
ஒட்டுமொத்த மூணாறு நகர ஜனத்தொகையையும் தாங்கி நிற்கும் மகாத்மா காந்தி காலனி, தமிழர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட காலனி. ஆனால் இந்த காலனியை, கேரளாவின் உட்புறங்களில் இருந்து புற்றீசல் போல கிளம்பி வந்த மலையாளிகள், ஐந்தையும் பத்தையும் கொடுத்து முழுவதுமாக கபளீகரம் செய்துவிட்டார்கள்.
ஞாயிற்றுக்கிழமை மட்டும், இந்த தமிழர்கள் சினிமா பார்ப்பதற்கென்று இருந்த ஒரே ஒரு தியேட்டரான பழைய மூணாறு *பங்கஜமும்* சில்வர் டிப்ஸ் என்கிற நட்சத்திர சொகுசு விடுதியாக மாறிவிட்டது.
அங்கிங்கெனாதபடி மூணாறு நகர வர்த்தகத்தின் மூலைமுடுக்குகளிலெல்லாம், மலையாளிகள் தங்களை நுழைத்துக் கொண்டு விட்டார்கள்.
இன்டேன் கேஸ் நிறுவனத்தை நடத்தி வந்த பாலாஜி ஒரு தமிழர். அவரும் சென்னை சென்று விட, இப்போது அந்த கேஸ் நிறுவனத்தை நடத்தி வருபவர் பாலாஜியின் மனைவி. தமிழர்களின் துரதிருஷ்டம் அந்தப்பெண்மணியும் ஒரு மலையாளி.
டாடா நிர்வாகத்தில் அசைக்க முடியாத நபராக கோலோச்சிய அலெக்சாண்டர் மறைந்துவிட, அவர் நுழைத்து விட்ட மலையாளிகள், இன்று கம்பெனியின் உயர் பதவிகளில் அமர்ந்து, சொகுசாய் லட்ச ரூபாய் சம்பளத்தில் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
Devikulam Estate Employees Union (சி ஐ டி யு இணைப்பு சங்கம் ) என்கிற இந்திய கம்யூனிஸ்ட்( மார்க்சிஸ்ட்) கட்சியின் தொழிற்சங்கம் தான், மூன்றாவது பெரிய தொழிற்சங்கம். இந்தத் தொழிற் சங்கத்தின் தலைவர்களாக முன்னாள் எம்எல்ஏ வான சுந்தரமாணிக்கம் மற்றும் மாணிக்கம் போன்றவர்கள் இருக்கும் வரை, எந்த மலையாளிக்கும் இங்கு வேலை கிடையாது. ஆனால் இன்றைக்கு மூணாறில் பெரிய பணக்காரராக அறியப்படும் கே.வி.சசி என்கிற மலையாளிதான் இந்த தொழிற்சங்கத்தின் தலைவர். ஒரு மலையாளி கூட தோட்டத் தொழிலாளியாக இல்லாத நிலையில், ஒரு மலையாளி அந்த தொழிற் சங்கத்திற்கு தலைவராக இருப்பது எந்த வகையில் நியாயம்...
Devikulam Estate Workers Union என்றழைக்கப்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த தொழிற்சங்கத்தின் தலைவர் எம்.ஒய்.அவுசேப் என்கிற மலையாளி. இதுதான் இடுக்கி மலையகத்தின் முதல் தொழிற்சங்கம்.
இந்த அவுசேப் யார் என்றால், பெரியாறு அணை உடைய போகிறது என்று கேரள சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டு வந்த, பீர்மேடு சட்டமன்ற உறுப்பினரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சி. ஏ. குரியனின் அக்கா மகன். இந்த சி.ஏ. குரியன் தான் இந்த சங்கத்தின் தலைவராக மரணிக்கும் வரை இருந்தவர். இப்போது தலைவர் அவரது மருமகன்.
இந்தக் கே.வி.சசிக்கும், இந்த அவுசேப்புக்கும், மூணாறுக்கும் என்ன சம்பந்தம்... எந்த மலையாளி யாவது இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில், கூலித் தொழிலாளியாக வேலை செய்கிறார்களா...?
தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை இருந்தால் வசதியாக இருந்திருக்கும் என்கிற கனவில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டு, பெயருக்கு என்று மூணாறில் ஒரு மருத்துவமனையை நடத்துகிறது டாடா நிர்வாகம்.
மூணாறு சுற்றுவட்டாரத்தில் கால் தடுக்கி விழுந்தால் கூட உங்களை தேனியில் உள்ள கா. விலக்கு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யக் கூடிய அளவிற்கு அதனுடைய லட்சணம் கொடிகட்டிப் பறக்கிறது.
மூணாறு நகரத்தில் நமக்கிருக்கும் ஒரே ஆறுதல், இந்த பஞ்சாயத்து தலைவர் பிரவீணா ஒரு பச்சை தமிழச்சி என்பது மட்டுமே...
மூணாறைச் சுற்றி நூற்றுக்கணக்கில் நிரவிக்கிடக்கும் சொகுசு விடுதிகளில், கணக்கு எழுதுவது முதல் கக்கூஸ் அலசுவது வரை தமிழர்கள் தங்கள் ராஜ விசுவாசத்தை மலையாளிகளுக்கு காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
ஆட்டோ ஓட்டுவது, நகரத்தில் துப்புரவுத் தொழிலை மேற்கொள்வது, காலையில் எழுந்ததும் தேயிலைக் காட்டுக்கு வேலைக்கு செல்வது, எப்போதாவது சாதிச் சண்டை போடுவது என்ன கையறு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கடவுளின் தேசம் என்று மலையாளிகள் மார்தட்டுவதற்குப் பின்னால் ஒளிந்து கிடக்கிறது லட்சக்கணக்கான தமிழ் மக்களின், ரத்தமும் வியர்வையும் சிந்திய உழைப்பு.
தான் யார் என்பதை உணராத வரை தமிழன் அங்கு அடிமைதான்...
பயணம் தொடரும்...
ச.அன்வர் பாலசிங்கம்
ஒருங்கிணைப்பாளர்
பெரியாறு- வைகை பாசன விவசாயிகள் சங்கம்.




Comments
Post a Comment