Skip to main content

கனிம வளக் கொள்ளைக்கு லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்களால் உயிர்பலி வாங்கும் கல்குவாரிகள்

கனிம வளக் கொள்ளைக்கு லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்களால் உயிர்பலி  வாங்கும் கல்குவாரிகள்!


தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு கனிம வள கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆட்சி மாறியும் காட்சி மாறாமல் புதிய வகையில் மீண்டும் கனிமவள கொள்ளை அனுமதி பெற்றும் அனுமதி இன்றியும் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது. குறிப்பாக தமிழக அரசால் பாதுகாக்கப்பட்ட மலைப்பகுதிகள் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பாறைகளை உடைத்து பெயர்த்து எடுக்க சட்டவிரோத அனுமதி தமிழக அரசு அதிகாரிகளாலேயே வழங்கப்படுகிறது. இதற்கு பின்னணியில் ஆளும் அரசியல் வர்க்கம் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. அதை மெய்ப்பிக்கும் வகையில் குமரி மாவட்டத்தில் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கல்குவாரிகள் இயங்க தடை செய்ய கோரிய சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன் அவர்கள் குமரி மாவட்டத்தில் 2 கல்குவாரிகள் தான் செயல்பட்டு வருகிறது என்று பதிலளித்தார். ஆனால் அனுமதி இன்றியும் அமைச்சர் சட்டசபையில் அறிவித்த அறிவிப்புக்குப் பின்பும் பல கல்குவாரிகள் அனுமதி பெற்றும் அனுமதி இன்றியும் செயல்பட்டு வருகிறது.  இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் கிடைக்கப்பெற்ற தகவலின் ஐந்து குவாரிகளுக்கு மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளிலேயே சட்டவிரோத அனுமதி கொடுத்துள்ள தகவல் கிடைத்தது. மேலும், குமரி மாவட்டத்தை சார்ந்த அமைச்சர் அளித்த பேட்டி மூலமும் தெரியவந்தது.  சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் கூறியதற்கு முரணாக குமரி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் தனது பேட்டியில் தற்போது குமரி மாவட்டத்தில் தற்போது 7 கல்குவாரிகள் செயல்பட்டு வருவதாகவும் மே மாதத்தில் இரண்டு கல் குவாரிகளின் அனுமதி காலம் முடிவடைந்து விடும் என்றும் அதன் பின்னர் அனுமதி நீட்டிக்க ப்படாது என்றும் கூறி சமாளித்தார் . ஏற்கனவே 2013ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் எந்த சட்டப்படி பாறைகளை உடைத்து பெயர்த்து எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டு மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பிய உடன் அன்று குமரி மாவட்ட ஆட்சியராக இருந்த நாகராஜன் 17 கல் குவாரிகளை அவசரமாக மூடிவிட்டதாகவும்  31 கோடி ரூபாய் அபராதம் விதித்ததுள்ளதாகவும் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.  31 கோடி ரூபாய் அபராதம் நாளது தேதி வரை வசூலிக்கப்படவில்லை என்பது தனிக் கதை என்று கூறப்படுகிறது. மேலும் குமரி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் கூறியதற்கு முரணாக கிரஷ்ஸர்கள் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் கிரஷர் உரிமையாளர்கள் சட்டவிரோதமாக அரசு அதிகாரிகளை கைக்குள் வைத்துக்கொண்டு சர்வ சாதாரணமாக தடையின்றி கட்டுப்பாடற்ற முறையில் தமிழகத்தில் கிடைக்கப் பெற்று வரும் வெடிபொருட்களை பயன்படுத்தி அனுமதியின்றி சட்டவிரோதமாக பாறைகளை உடைத்து வருவதும் கனரக டாரஸ் லாரிகளில் அதிக பாரம் ஏற்றி அந்த கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்துவதும் லஞ்சம் வாங்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு அதற்காக லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதித்துக் கொள்வதும் குமரிமாவட்டத்தில் தொடர்கதையாகி வருகிறது. அதைத் தடுக்க புதிய மாவட்ட எஸ்பி நியமிக்கப்பட்டும் அவரை ஏமாற்றும் விதத்தில் அவருக்கு கீழுள்ள அதிகாரிகள் செயல்பட்டு வருவதாகவும் அதனால் சோதனைச் சாவடிகள் வழியாகவே அனைத்து கனிம வள கடத்தல் லாரிகளும் அதிக பாரம் ஏற்றி தொடர்ந்து செல்வதாகவும் இதுகுறித்து மாவட்ட எஸ்பியின் கவனத்திற்கு சென்ற உடன் அவரை சமாளிக்க புலி படத்துக்காக ஒரு சில கனரக வாகனங்களை பிடித்து வழக்குப் போட்டு சமாளித்து விடுவதாகவும் கூறப்படுகிறது. 


மேலும்  திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் கடந்த பல மாதங்களுக்கு முன் சேரன்மாதேவி சார்ஆட்சியர் ஒருவர் நெல்லை மாவட்டத்தில் பல கல் குவாரிகளை சோதனையிட்டு அனுமதிக்கு புறம்பாக அதிக அளவு பாறை கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக கண்டறிந்து அளவீடு பணிகள் மேற்கொண்டு 20 கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் விதித்தார். ஆனால் அந்த அபராதத் தொகை குறித்த விவரங்கள் கனிமவளக் கொள்ளையர்களுக்கு செல்லும் முன்பே அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 

இந்த நிலையில் தற்போது நெல்லை அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியில் சட்டவிரோதமாக குத்தகை அனுமதி முடிந்த பின்னரும் ஆளும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் துணையுடன் கல்குவாரிகள் தொடர்ந்து இயங்கி வந்தது. அந்தக் கல் குவாரிகளில் 90 அடிக்கு மட்டுமே அனுமதி பெற்றிருந்த நிலையில் சுமார் 400 அடிக்கு கீழே பெருமளவு கனிம வளங்களை வெட்டி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த கல்குவாரியில் அதிக அளவு வெடிபொருட்களை பயன்படுத்தி சம்பவத்தன்று நள்ளிரவில் பாறைகளை வெடி வைத்து தகர்த்து உள்ளனர். இதில் ஏற்பட்ட விபத்தில் பாறைகள் உடைந்து சிதறியதில் கற்குவியலுக்கு உள்ளே ஆறு பேர் சிக்கிக்கொண்டனர். உடனே மாவட்ட ஆட்சியர் அந்த கல் குவாரிக்கு சீல் வைத்து விட்டதாக அறிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கல்குவாரி விபத்து தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கனிம வள சுரங்கத்துறை இயக்குநர் விமல்ராஜ், மேற்படி குவாரி அனுமதியின்றி இயங்கியதை ஒப்புக்கொண்டுள்ளார். 2018ல் அனுமதி பெற்ற இந்த குவாரி  மூன்று ஆண்டுகள் மட்டுமே இயக்க பட்டதாகவும் அப்போதே அதிக அளவு கனிம வளங்கள்‌வெட்டி எடுக்கப்பட்டு விட்டதாகவும் 2021ல் அனுமதி  நிறுத்திவைக்கப்பட்டது என்றும் தெரிவித்து உள்ளார். அதன்பின்பு அனுமதியின்றியே இதுவரை நிறுவனம் இயங்கிவந்துள்ள விவரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனிமவள மாபியா கும்பலிடம் இருந்து பெருமளவு லஞ்சப் பணம் அதிகாரிகளுக்கு கைமாறியதன் விளைவாக சட்டவிரோத கல்குவாரிகள் இயங்க அனுமதி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற சட்டவிரோத கல்குவாரிகள் ஆளும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் தயவுடன் பணகுடி, நாங்குநேரி, காவல்கிணறு உட்பட நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகள் மற்றும் குமரி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் உட்பட பல பகுதிகளில் அதிகம் இயங்குகின்றன. மாதந்தோறும் அதிகாரிகளுக்கு மாமூல் போகின்றன. ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு நன்கொடையும் அவ்வப்போது போவதுண்டு எனக் கூறப்படுகிறது. அதனால் தான் அரசு கண்டுகொள்ளவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காவல்கிணறு அருகே உள்ள கல்குவாரி ஒன்றிலிருந்து இரு திமுக பிரமுகர்களுக்கு கோடியில் பணம் கை மாறியதாகவும் கூறப்படுகிறது. அதே போல குமரி மாவட்டத்தில் இருந்தும் கோடிகளில் பணம் கை மாறியதாகவும் கூறப்படுகிறது. காவல் நிலைய ஆய்வாளர்கள் சிலருக்கு மாதம் 10 லட்சம் ரூபாய் வரை பல கல்குவாரிகள் மூலம் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. டிஎஸ்பி அளவிலான ஒரு சில அதிகாரிகளுக்கு சுமார் ஐம்பது லட்ச ரூபாய் வரை லஞ்சம் கை மாறுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் நெல்லை மாவட்டத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியாகவும் நெல்லை மாவட்டத்தில் இன்று தென்காசி வழியாக கேரளாவுக்கும் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் உட்பட பல முக்கிய பிரமுகர்களுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே  அடை மிதிப்பான் குளத்தில் இயங்கி வந்த இந்த குவாரியை இதுவரை கண்காணிக்காத அதிகாரிகள், மாவட்டத்தில் இயங்கும் 52 குவாரிகளை கண்காணிக்கப்போவதாக தற்போது புதிதாக அறிவித்துள்ளனர்.  தமிழகத்தில் பல்வேறு குவாரிகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட ஆழமாக கற்களை வெட்டியெடுப்பது, பாதுகாப்பற்ற சூழலில் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கும் நிலையில்,  அரசியல் அழுத்தம் மற்றும் லஞ்சத்தால் அதிகாரிகள் அவற்றை கண்டுகொள்ளாமல் இருப்பது வழக்கமாக உள்ளது.


ஆட்சியில் முக்கிய பொறுப்பிலிருக்கும் ஒருவருக்கு 2 கோடி, உள்ளாட்சி பிரமுகர் ஒருவருக்கு 1 கோடி என 3 கோடி ரூபாய் காவல்கிணறு அருகே இயங்கும் பெரிய குவாரி ஒன்றிலிருந்து அவர்கள் பதவிக்கு வந்த தொடக்கத்தில் சென்றுள்ளது.

ஆம் இது போன்ற விபத்து சாவுகளுக்கு முன்பே அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் வாய்க்கரிசி போடுகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை என்றே இது போன்ற சம்பவங்களின் மூலம் நம்ப வேண்டி உள்ளது. எனவே, கொடூர உயிரிழப்புகளுக்கு கண்துடைப்பு விசாரணை மட்டுமே தற்போது நடக்கிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக இதுபோன்ற விபத்துகளில் உயிர் இழக்கும் போது ஒரு லட்ச ரூபாய் மட்டுமே இழப்பீடு வழங்கும் தமிழக அரசு கனிமவள கொள்ளையை மூடி மறைக்கும் விதமாக உயிரிழந்தோருக்கு 15 லட்ச ரூபாய் இழப்பீடு அறிவித்து மூடிமறைக்க முயன்று வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏற்கனவே கடந்த முறை திமுக ஆட்சியின்போது தமிழகம் முழுவதும் பெருமளவு மணல் கடத்தல் நடந்ததை நினைவுபடுத்தினர். அப்போது அண்டை மாநிலங்களுக்கு பெருமளவு மணல் கடத்தல் நடந்ததும் குறிப்பிடத்தக்கது. அப்போது மணல் கடத்தல் தொடர்ந்ததால் இன்று தமிழகத்தில் கட்டுமான பணிகளுக்கு மணல் கிடைக்காமல் மக்கள் எம்சாண்ட்க்கு மாறும் நிலை திமுக அரசால் தான் ஏற்பட்டது என்றால் மிகையல்ல. அதேபோல தற்போது தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவு பாறைகள் உடைக்கப்பட்டு பல்வேறு வகைகளாக மாற்றி கடத்தப்படுகிறது. மணல், மழை பெய்யும்போது பல வருடங்களுக்கு பிறகாவது ஆறுகள் மூலம் உற்பத்தியாகி கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் பாறைகளை உடைத்து பெயர்த்து எடுத்தால் அவைகள்‌ வளர்வதில்லை. புதிதாக உருவாவதும் இல்லை என்பதை அரசும் அதிகாரிகளும் கவனத்தில் கொண்டால் மட்டுமே தமிழகத்தில்  கட்டுமான பணிகளுக்கு கனிம வள பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள இயலும்.  

எனவே, தமிழ்நாடு முழுவதும் அனுமதியற்ற கல்குவாரிகளை உடனே மூடவும், அனுமதி பெற்றும் விதிமீறலில் ஈடுபடும் கல்குவாரிகளின் செயல்பாட்டை முடக்கவும் அரசு முன்வரவேண்டும். லஞ்சம் வாங்கும் வருவாய் துறை கனிம வளத்துறை காவல்துறை அதிகாரிகளை உடனடியாக பணியிட மாற்றம் செய்து நேர்மையான அதிகாரிகளை கனிம வளத்திற்கு அனுமதி கொடுக்கப்படும் இடங்களில் நியமிக்க வேண்டும். தற்போது இயங்கும் குவாரிகளின் அருகே சுற்றுச்சூழல் சீர்கேடு, விவசாய நிலங்கள் பாதிப்பு, மலைவளம் அழிந்ததால் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் மற்றும் மழை பொழிவு குறைவு போன்றவற்றை பற்றியும் அந்தந்த துறையினர் ஆராய்வது அவசியம் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


அதுமட்டுமின்றி, எவ்வித அனுமதியுமின்றி சுமார் 7 மாதங்களுக்கு மேலாக இயங்கி வந்த அடைமிதிப்பான்குளம் குவாரியை கண்காணித்து நடவடிக்கை எடுக்காத வருவாய்துறை, கனிமவள துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்து  கிரிமினல் குற்றப்பிரிவுகளில் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் அளவுக்கு அதிகமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ள கனிம வளங்களை அளவீடு செய்து அபராத தொகையை கல் குவாரி உரிமையாளர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து வசூலிக்க வேண்டும் என்றும் கல்குவாரிகள் இயங்கிய பகுதிகளில் பணியாற்றிய மற்றும் தற்போது பணியாற்றிக் கொண்டு இருக்கும் காவல்துறை வருவாய் துறை கனிம வளத்துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு மூலம் ரகசிய விசாரணை நடத்தி வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறும் பொது மக்கள் திமுக அரசும் அதன் முக்கிய பிரமுகர்களும் நேர்மையானவர்கள் என்று நிரூபிக்க மேற்படி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சாத்தியமாகும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சிறப்புச் செய்தியாளர்

அட்வகேட் ஹோமர் லால்

Comments

Popular posts from this blog

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு! தேனி, மார்ச்., 07:  தீண்டாமை கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்றுங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்தவிடாமல் சாதிய வன்மத்துடன் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்ற கோரிக்கையுடன் அரண்மனைபுதூர் ஊராட்சி கிராம கமிட்டி தலைவர் பாலசுந்தரராஜ் மற்றும் கோட்டைப்பட்டி கிராம பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  இந்தியா நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளுக்கு மேலாகியும், தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது. தேனி மாவட்டம், தேனி வட்டம், அரண்மனை புதூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைப்பட்டி கிராமத்தில் ஜாதிய தீண்டாமை கொடுமை நடைபெறுகிறது. இங்கு வாழும் பட்டியல் பிரிவிலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படைவசதி திட்டங்களை தடுத்து வருகிறார்கள். கோட்டைப்பட்டி கிராமத்தில் வாழும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச்சேர்ந்த தங்கப்பாண்டி, சுந்தரவடிவேல், செல்வம் உட்பட பத்துபேர்கள் கொண்ட கும்பல் சேர்ந்து தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பொருளாதார ரீதிய...

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு!

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு! சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் முத்துமாரி என்பவர் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.  நேற்று அவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் முத்துமாரி என்பவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்திய கொடுஞ்செயலை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் வன்மையாக கண்டிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் என்பவரையும்,அதற்கு தூண்டுகோலாய் இருந்த கல்லூரியின் பொறுப்பு முதல்வர் நாகநாதனையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலைமுயற்சி, வழக்குப் பதிவுசெய்த...

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!  தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கம் வேதனை!! சென்னை: தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க மாநிலத்தலைவர் ஜெ.மூர்த்தி மற்றும் பொதுச் செயலாளர் வெ.லெனின் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:               கருவூலத்துறையில் தற்போது கிட்டத்தட்ட 1600 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கும் சூழ்நிலையில் குறிப்பாக இந்த காலிப்பணியிடங்கள் மாவட்ட மற்றும் சார்நிலைக்கருவூலங்களில் அதிகமாக இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக தலைமை அலுவலகத்தின் வெவ்வேறு பிரிவுகளில் இருந்து பல்வேறு வகையான புள்ளி விபரங்கள் கோரப்படுவதோடு IFHRMSல் தரவுகளை மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்யவும் உயர் அலுவலர்களால் நெருக்கடி தரப்படுகிறது. கோரப்படுகின்ற புள்ளி விவரங்கள் அனைத்தும் 100% பணம் பெற்று வழங்கும் அலுவலர்களிடம் இருந்து பெறவேண்டிய தகவல்களாகும். ஒரு விபரம் முழுமை பெறுவதற்குள் அடுத்தடுத்த புள்ளி விபரங்கள் கோரப்படுவதால் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் கருவூல ஊழியர்கள...