கேரள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜோஸ் கே மாணி தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அன்வர் பாலசிங்கம் வேண்டுகோள்.
கேரள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜோஸ் கே மாணி தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அன்வர் பாலசிங்கம் வேண்டுகோள்..
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம அறிக்கையில் கூறி இருப்பதாவது:
கேரளத்தின் அரசியல் வரலாற்றில், தனி முத்திரை பதித்தவர் கேரள காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த திரு கே. எம். மாணி. தொடர்ச்சியாக 13 முறை கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு, அச்சுதமேனன், வாசுதேவன் நாயர், இ.கே. நாயனார், கருணாகரன், உம்மன்சாண்டி என எல்லாக் கட்சி அமைச்சரவையிலும், 20 ஆண்டு காலங்கள் அமைச்சராக அங்கம் வகித்தவர் கே.எம்.மாணி.
கல்லூரிக் கல்வியை திருச்சி புனித வளனார் கல்லூரியிலும், சட்டப்படிப்பை சென்னை சட்டக் கல்லூரியிலும் முடித்த மாணியின் மகனான ஜோஸ் கே மாணியும், தன் தந்தையின் அடியொற்றி, சென்னை லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பையும்,எம் பி ஏ பட்டத்தை கோவை பி.எஸ்.ஜி கல்லூரியிலும் பயின்று முடித்தார்.
அவரது தந்தைக்கு வாய்த்த தேர்தல் வெற்றி, ஜோஸ் கே மாணிக்கு வாய்க்கவில்லை. தந்தை மறைந்த பிறகு பாலா சட்டமன்ற தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில், தனது உறவினரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான, கப்பன் மாணியிடம் தோற்றுப்போனார். தன் தந்தை உயிரோடு இருக்கும்போது கோட்டயம் நாடாளுமன்றத் தொகுதியில் அசைக்க முடியாத வெற்றியை பெற்ற ஜோஸ் கே மாணி, பாலா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தோற்றது கேரள அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வெற்றி பெற்றிருந்தால் அவர் தான் கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சர். அவர் வெற்றி பெறாததால் அவரது கட்சியைச் சேர்ந்த ரோசி அகஸ்டின் இடுக்கி சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று, நீர்வளத்துறை அமைச்சராக இன்றைக்கும் பொறுப்பு வகித்துக் கொண்டிருக்கிறார்.
தன் தந்தையைப் போலவே அரசியல் நிலைபாடுகளை அவ்வப்போது மாற்றும் ஜோஸ் கே மாணி, கடந்த 2018 ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி சார்பில் நாடாளுமன்ற மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவிக்காலம் 2024 ஆம் ஆண்டுவரை இருந்த நிலையில், அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறிய தோடு, தன்னுடைய பதவியையும் ராஜினாமா செய்து, இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியில் இணைந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மறுபடியும் ராஜ்ய சபாவிற்கு தேர்வு செய்யப்பட்டார்.
இது அவர்களுடைய கடந்த கால வரலாறு...
இதைவிட கூடுதலாக கடந்த 2008 ஆம் ஆண்டு கேரள காங்கிரஸ் கட்சியில் தனியே தமிழர் முன்னணி என்கிற பிரிவு ஒன்றையும் உருவாக்கி, மூணாறில் அதற்கான மாநாட்டையும் நடத்தி, தொழிற்சங்க தலைவரான குப்புசாமி அவர்களை அதற்கு தலைவராகவும் நியமித்தார் மாணி. அந்த அளவிற்கு தமிழர்களோடு கேரள காங்கிரஸ் கட்சிக்கு நெருங்கிய உறவு இருந்தது.
கேரளாவின் மத்திய மாவட்டங்களான கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி, எர்ணாகுளம் மாவட்டங்களில் பெரிய செல்வாக்குப் பெற்ற இந்தக் கட்சியின் பின்புலத்தில் பெரிய அளவிற்கு தமிழர்களின் வாக்கு வங்கி இருக்கிறது. அதனாலேயே தமிழர் முன்னணி என்கிற பிரிவை தனியே தன் கட்சிக்குள் அமைத்தார் என்பது தான் நிஜம்.
இப்படி தமிழர்களின் ஏகோபித்த ஆதரவால் செல்வாக்குப் பெற்ற இந்த கட்சி, இப்போது தடம் மாறி கேரள இனவெறியர்களோடு கரம் கோர்த்துக் கொண்டிருக்கிறதோ என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.
நேற்று முன்தினம் நாட்டின் பிரதமர் அவர்களுக்கு, ஜோஸ் கே மாணி எழுதிய கடிதத்தில்...
கேரளாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், தலைவர்களும்,மக்களும், முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணையை கட்ட வேண்டும் என்கிற ஒருமித்த கருத்தில் இருப்பதால்...
பழைய அணையை இடித்து விட்டு, புதிய அணை கட்டுவதற்கு, பாரதப் பிரதமர் அவர்களும்,மத்திய அரசும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்.
ஜோஸ் கே மாணியிடமிருந்து இத்தகைய அறிவிலித்தனமான ஒரு தகவல் வரும் என்று நான் எண்ணிக் கூட பார்க்கவில்லை. ஆனால் வந்துவிட்டது. என்ன சிந்தனையில் அவர் இதை கொடுத்தார் என்றும் எனக்குத் தெரியவில்லை. கடந்த 2011 டிசம்பர் காலகட்டங்களில், நாடாளுமன்ற உறுப்பினரான தாமஸ் சாழிக்காடனுடன் சேர்ந்து நாடாளுமன்றத்தில் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்று கையில் பதாகை ஏந்தி போராடியபோது, அவரை அழைத்து உங்களுடைய தகப்பனார் வழியில் செல்வது தான் உங்களுடைய எதிர்கால அரசியலுக்கு சிறந்தது என்று அறிவுரை வழங்கினார் மூணாறில் உள்ள அதே கட்சியைச் சேர்ந்த எனது அண்ணன் மோகன்ராஜ்.
அழகுத் தமிழில் பேசும் ஜோஸ் கே மாணி, அப்போது அவரது கருத்தை ஆமோதித்து தான் பேசினார். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை. தமிழகத்திற்கு எதிராக திரும்பி மறுபடியும் நிற்கிறார். ஜோஸ் கே மாணி முல்லைப் பெரியாறு அணை விடயத்தில் தன்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், அடுத்து வரும் தேர்தல்களில், கேரளாவின் மத்திய மாவட்டங்களில் தமிழர்களுடைய வாக்கை, கேரள காங்கிரசிற்கு எதிராக திருப்பி விடக் கூடிய வேலையை நாங்கள் செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Comments
Post a Comment