ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்திலிருக்கும், உட்ஃபிரயார் தேயிலை கம்பெனியை, மேகமலையிலிருந்து வெளியேற்ற வேண்டும்
முண்டந்துறை புலிகள் காப்பகத்திலிருந்து பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் தேயிலை கம்பெனியை, மாஞ்சோலையிலிருந்து வெளியேற்றியது போல..
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்திலிருக்கும், உட்ஃபிரயார் தேயிலை கம்பெனியை, மேகமலையிலிருந்து வெளியேற்ற வேண்டும்
_________________________
ச.அன்வர் பாலசிங்கம்
ஒருங்கிணைப்பாளர்
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.
திருநெல்வேலி மாவட்டத்தில், 1988 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் தான் தமிழகத்தின் முதல் புலிகள் காப்பகம். வன வளத்திற்கும், மழை வளத்திற்கும் கொஞ்சமும் பஞ்சமில்லாத மேற்கு தொடர்ச்சி மலைகளில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த புலிகள் காப்பகம், பிரிட்டிஷ்காரர்களே வியந்து பார்த்த வன வளத்திற்கு சொந்தமானது.
இந்தப் புலிகள் காப்பகத்தில் உள்ளடங்கிய 22,972 ஹெக்டேர் வனப்பகுதிகள், சிங்கம்பட்டி ஜமீன்தாருக்கு சொந்தமானதாக இருந்தது.
இவ்வளவு திரண்ட சொத்தும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் சிங்கம்பட்டி ஜமீன்தாருக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்தாகும். இந்த திரண்ட சொத்தை 1952 ஆம் ஆண்டு நாடு விடுதலை அடைந்த பிறகு, குத்தகை நிலங்கள் உள்பட மொத்தமாக சிங்கம்பட்டி ஜமீன்தார் வசமிருந்த அத்தனை வனச்சொத்துக்களையும் அரசு கைப்பற்றி ஆணை வெளியிட்டு விட்டது.
அந்த குத்தகை பகுதிகளில் கிட்டத்தட்ட 8 ஆயிரத்து 323 ஏக்கரை தங்கள் கைவசம் வைத்திருந்த ஒரு தேயிலை கம்பெனியான பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன், அரசுடன் செய்து கொண்ட ஒரு உடன்பாட்டின் அடிப்படையில், தன்னுடைய குத்தகை காலத்தை நீட்டித்துக் கொண்டது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷனின் உரிமையாளர், பாகிஸ்தானின் தந்தை என்றழைக்கப்படும் முகமது அலி ஜின்னாவின் வாரிசுகளில் ஒன்றான நூல்ஸி வாடியா.
அந்த அதிகாரத்தின் அடிப்படையிலேயே அவர்களால் மாஞ்சோலை வனப்பகுதிக்குள் தேயிலைத் தோட்டத்தை தொடர முடிந்தது. மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி என பரந்து விரிந்து கிடந்த அந்த தேயிலை தோட்டத்தில், ஆயிரக்கணக்கான ஏக்கர்களை கையேற்ற பூமியாகவும் வளைத்து வைத்திருந்தது பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்.
1929 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி, ஏக்கர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் 57 காசு என்கிற விகிதத்தில் சிங்கம்பட்டி ஜமீன்தாரிடம்
செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், 99 ஆண்டுகளுக்கு காட்டை குத்தகைக்கு எடுத்த பிபிடிசி, மொத்தமாக தேயிலையை பயிரிட்டது. அதற்கான சீதோஷ்ணமும், தேயிலை விவசாயத்திற்கு பெருமளவு கை கொடுத்தது.
இந்த நிலையில்தான் வனத்தின் தன்மையை அறிந்து, அதை தமிழ்நாடு வனச்சட்டம் 1882, இந்திய வனச்சட்டம் பிரிவு 4 இன் கீழ், பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க வனத்துறை விரும்பியபோது, 1978 லேயே வனத்துறைக்கும், தேயிலை கம்பெனிக்கும் போர் தொடங்கிவிட்டது.
வனத்துறை அதிகாரிகள், எங்கே நமது தேயிலை கம்பெனியை, காட்டைவிட்டு அப்புறப்படுத்தி விடுவார்களோ என்கிற பயத்தில், பிபிடிசி தேயிலை கம்பெனி ஆட்டம் கண்டிருந்த நிலையில்தான், 1988 ஆம் ஆண்டு களக்காடு புலிகள் காப்பகத்தையும், முண்டன்துறை புலிகள் காப்பகத்தையும் இணைத்து களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகமாக அறிவிப்பு வெளியிட்டது.
இந்தச் செய்தி தேயிலை கம்பெனிக்கு ஒரு இடிச் செய்தியாக அமையவே, உடனடியாக அம்பை தாசில்தாரை தொடர்பு கொண்டு தனக்கு பாத்தியப்பட்ட நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று முறையிட்டது தேயிலை கம்பெனி. மனுவை கவனமாக பரிசளித்த அம்பை தாசில்தார், தேயிலை கம்பெனிக்கு பட்டா வழங்க முடியாது என்று மனுவை நிராகரித்தார்.
நேற்று வரை தனக்கு கட்டுப்பட்டு கிடந்த ஒரு தாசில்தார், தங்களுடைய மனுவை நிராகரித்ததும், பதட்டம் தொற்றிக் கொண்ட நிலையில், உடனடியாக மனுவை திருநெல்வேலி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது தேயிலை கம்பெனி. மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தங்களை விவசாயியாக கருதி பட்டா வழங்க வேண்டும் என்று கூடுதலாக முறையிட்டு இருந்தது.
அம்பாசமுத்திரம் தாசில்தாரின் நிராகரிப்பை கவனமாக உள்வாங்கிய மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதியரசர் பி. தனபால் அவர்கள், தேயிலை கம்பெனியின் வேண்டுகோளை நிராகரித்து, அம்பாசமுத்திரம் தாசில்தாரின் உத்தரவை அமல்படுத்த ஆணையிட்டார்.
நிலைமை கையை மீறிச் செல்வதை உணர்ந்த பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன், வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றது. தாங்கள் 1929 ஆம் ஆண்டு சிங்கம்பட்டி ஜமீன்தாரிடம் குத்தகைக்கு பெற்ற நிலத்திற்கு, பட்டா வேண்டுமெனவும், தங்களை ஒரு விவசாயியாக அங்கீகரிக்கப் வேண்டும் என்றும் மேல்முறையீடு செய்தது.
வழக்கை கவனமாக விசாரித்த உயர் நீதிமன்ற நீதியரசர் எம்.எம்.சுந்தரேசன் அவர்கள், திருநெல்வேலி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டார்கள்.
பரபரப்பு பற்றிக் கொண்ட இந்த இக்கட்டான நிலையில், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள், கூலி உயர்வு கேட்டு களத்தில் இறங்கினார்கள். தொழிற்சங்கங்கள் என்று எதுவும் பெரிதாக இல்லாத நிலையில், புதிய தமிழகம் கட்சி போராட்டத்தை தன் வசப்படுத்தியது.
மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி, கோதையாறு என எங்கு பார்த்தாலும் வேலை நிறுத்தம் வீரியம் அடைந்தது.
இந்த நிலையில்தான் 1999 ஆம் ஆண்டு ஜூலை இருபத்தி மூன்றாம் தேதி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து தங்கள் குறைகளை சொல்வதற்காக ஊர்வலமாக வந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மீது, தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தது காவல்துறை.
இரண்டு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதலில், காவல்துறையின் தாக்குதலுக்கு அஞ்சி, அருகாமையிலிருந்த தாமிரபரணி ஆற்றில் குதித்தவர்கள், மிதிபட்டு செத்தவர்கள் என 17 பேர் தங்களுடைய இன்னுயிரை மாய்த்துக் கொண்டார்கள்.
ஏற்கனவே எரிந்துகொண்டிருந்த பட்டா விவகாரத்தில், இதுவும் கூடுதலாக சேர்ந்துகொள்ள,பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் தலையை பிய்த்துக் கொண்டது.
உயர் நீதிமன்றமும் தங்களை கைவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கை கொண்டு சென்றது தேயிலை கம்பெனி. வழக்கை கவனமாக ஆய்வு செய்த நீதியரசர்கள் எஸ்.ஏ.பாப்டே மற்றும் எல்.நாகேஸ்வரராவ் அடங்கிய பெஞ்ச், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்ததோடு, இன்னும் கூடுதலாக குத்தகை காலம் முடிவுக்கு வரும் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி, பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் மாஞ்சோலை விட்டு வெளியேற வேண்டும் என்று கடுமையான உத்தரவையும் பிறப்பித்தது. அதாவது சிங்கம்பட்டி ஜமீன்தாரிடம், பிபி டிசி செய்துகொண்ட ஒப்பந்தம் 1929-ம் ஆண்டு பிப்ரவரி 12 ஐ, 99 ஆண்டுகளுக்கு கணக்கிட்டு... இந்தத் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.
அரசியல் ரீதியாக பெருத்த செல்வாக்குப் பெற்ற மாஞ்சோலை தேயிலை கம்பெனியான இந்த பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன், 1863 இல் பிரிட்டிஷ் காரன் ஒருவனால் உருவாக்கப்பட்ட கம்பெனி. பின்னாட்களில் அதை விலை கொடுத்து வாங்கிய முகமது அலி ஜின்னாவின் குடும்பம்தான், பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் தேயிலை கம்பெனிக்கு சொந்தமான குடும்பம்.
அடர்ந்த வனப்பகுதிக்குள் இருக்கும் ஒரு தேயிலை கம்பெனியை வெளியேற்ற தொடர்ச்சியாக 30 ஆண்டுகாலம் போராடிய திருநெல்வேலி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் நம்முடைய பாராட்டுக்குரியவர்கள்.
அந்த வனத்திலிருந்து பிறப்பெடுக்கும் தாமிரபரணி ஆறு, இன்றைக்கு வற்றாத ஜீவநதியாக ஓடிக் கொண்டே இருப்பதற்கு காரணம், தேயிலை கம்பெனி முடக்கி வைக்கப்பட்டுள்ளதால்தான் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
அது போன்ற ஒரு போராட்டத்தை, ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தை ஆக்கிரமித்திருக்கும் உட்பிரயார் தேயிலைக் கம்பெனியை வெளியேற்றுவதற்கு தேனி மாவட்ட வனத்துறை சட்டப் போராட்டத்தைத் தொடங்க வேண்டும்.
மாஞ்சோலை எஸ்டேட்டிலாவது ஒரு ஒப்பந்தம் இருந்தது. ஆனால் அதுபோன்ற ஒப்பந்தம் எதுவும் மேகமலையில் இல்லை. பிரிட்டிஷ் காரர்களால் ஏலம் விடப்பட்ட கண்டமனூர் ஜமீன்தாருக்கு சொந்தமான அந்த சொத்தை, ஏலத்தில் பெற்ற குஜராத்தைச் சேர்ந்த ரஸ்டன்சி பிரதர்ஸ் தான், இந்த சொத்துக்கு காரணகர்த்தாக்கள்.
மாஞ்சோலையில் திருநெல்வேலி மாவட்ட வனத்துறை பயன்படுத்திய தமிழ்நாடு வனச்சட்டம் 1882 ஐ பயன்படுத்தி,
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்திற்குள் உள்ளடங்கி இருக்கும் வனப் பகுதிகளை, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக இயக்குனரும், துணை இயக்குநரும் இதற்கு தயாராக வேண்டும்.
நன்றி.











Comments
Post a Comment