தமிழ் மொழியை தொடர்ந்து புறக்கணிக்கும் மத்திய அரசு. உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் வேதனை.
தமிழ் மொழியை தொடர்ந்து புறக்கணிக்கும் மத்திய அரசு .
உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் வேதனை!
மத்திய கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும் ஐசிசிஆர் விளம்பரத்தில் வெளிநாடுகளில் இந்திய பேராசியர் இருக்கைகள் நிரப்ப விளம்பரம் வெளியாகி உள்ளது.
சமஸ்கிருதம், இந்தி, தமிழ், வரலாறு, உருது, புத்த மதம் போன்ற பாட பிரிவுகளுக்கான இருக்கைகள் உள்ளன. வெளிநாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இருக்கைகள் இருந்தன. 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போது வெறும் 51 இருக்கைகள் மட்டுமே உள்ளன. அதிலும் அதிகபட்சமாக இந்தி, சமஸ்கிருதம் உள்ளன.
இந்த பட்டியலில் தமிழுக்காக போலந்து நாட்டின் 2 இருக்கைகள் உள்ளன. போலந்து நாட்டின் வார்ஸா பல்கலைக்கழகத்திலும், கிராக்கூப்யாகி எலோனியன் பல்கலைக்கழத்திலும் கடந்த 2014 முதல் பேராசிரியர்கள் அமர்த்தப்படவில்லை. இந்த இருக்கைகள் காலியாக இருப்பதற்கு மத்திய அரசு தமிழுக்கு எதிரான மனநிலையில் இருப்பதையே காட்டுகிறது.
போலந்து நாட்டு தமிழ் இருக்கைகளுக்கு நியமிக்கப்பட்ட பேராசிரியருக்கு 3 ஆண்டுக்கு மேல் பணி வாய்ப்பு கிடைத்தது. பிறகு அப்பணி ஓராண்டாக குறைக்கப்பட்டது. தற்போது இதுவெறும் 9 மாதங்களாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் அங்கு செல்லும் பேராசிரியர்களுக்கு மத்திய அரசால் செய்து கொடுக்கப்படும் வசதிகள் படிப்படியாக குறைக்கப்பட்டு உள்ளன. இதனால் அங்கு பணியாற்ற தமிழ்ப் பேராசிரியர்கள் இடையே ஆர்வம் குறைந்து காணப்படுகின்றது. இந்த நிலை இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மற்ற பாடப்பிரிவுகளில் இல்லை,
போலந்து நாட்டு மாணவர்கள் தமிழைக் கற்க அதிக ஆர்வம் காட்டுபவர்கள். வார்ஸா பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களில் மாணவிகளே அதிகம் பேர் உள்ளனர். ஆர்வத்தோடு தமிழ் படிக்க வந்தவர்கள் மாணவிகளே அதிகம். மாணவர்கள் இரண்டாமாண்டு படிக்கும் போது தமிழ் மொழியின் அமைப்பையும் இலக்கிய வரலாற்றையும் கற்றுக் கொள்கிறார்கள். தமிழை வாசிக்கவும் கற்றுக் கொள்கிறார்கள்.
ஆகவே தற்போது வெளியாகி உள்ள பட்டியலில் போலந்து 2 வருகை தமிழ் பேராசிரியர்கள் இருக்கைகள் இடம் பெற செய்ய மத்திய கலாச்சாரத்துறை தகுந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்மென உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment