தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள கிறித்தவ உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் திருச்சபைகளுக்கு பயன் உள்ளதா? ஆபத்தானதா?
தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள கிறித்தவ உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் திருச்சபைகளுக்கு பயன் உள்ளதா? ஆபத்தானதா?
உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் பொருளாளர் & தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் விளக்கம்.
தமிழ்நாடு அரசிடம் கடந்த 2019ம் ஆண்டே கிறித்தவ சமூக செயற்பாட்டாளர்களால் 15 அம்ச கோரிக்கை அடங்கிய மனு (முதல் கோரிக்கையாக உலமாக்கள் நல வாரியம் இருப்பது போன்று திருச்சபை பணியாளர்கள் வாரியம் அமைப்பது, இரண்டாவது 2008ம் ஆண்டே துவங்கப்பட்டு தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிற முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தை போன்று கிறித்தவ மகளிர் உதவும் சங்கம் அமைப்பது) அப்போதைய சிறுபான்மை நலத்துறை இயக்குநர் வள்ளலாரிடம் வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக கடந்த ஆட்சியின் போது 2019 ம் ஆண்டு கிறித்தவ மகளிர் உதவும் சங்கத்தை அப்போதைய அதிமுக அரசு நிறைவேற்றிகொடுத்தது. அரசின் நிதி சுமை, சட்டமன்ற தேர்தல் போன்றவற்றின் காரணமாக பிறதிட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன.
தற்போது திமுக அரசு பதவியேற்று சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு சலுகைகளை சட்டமன்றத்தில் 08.09.21 அன்று 2021 - 2022 மானியக் கோரிக்கையில் செஞ்சி மஸ்தான் (சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்) அறிவிப்பு வெளியிட்டார்.
அதன் தொடர்ச்சியாக மாநில அரசு கடந்த 22.5.22 அன்று அரசு ஆணை (நிலை) எண்.39 ன் படி ஆணை வெளியிடப்பட்டது.
உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் திருச்சபை போதகர்கள் தங்களுடைய திருச்சபை பணியாளர்களை உறுப்பினர் ஆக சேர்த்து, ஏழ்மை நிலையில் உள்ள திருச்சபை பணியாளர்கள் அரசின் நலத் திட்டங்களை பெற்று பயன் பெற உதவ முடியும்.
ஒரு திருச்சபை போதகர் தனது திருச்சபையில் உள்ள அதிகப்பட்சமாக 6 பணியாளர்களை வாரியத்தில் உறுப்பினர்களாக இணைக்க பரிந்துரை செய்யலாம்.
வாரியத்தில் உறுப்பினர்களாக இணைபவர்கள் திருச்சபைகளில் பணியாற்றும் உபதேசியார்கள் (சிஎஸ்ஐ திருச்சபையில் உள்ள பணியாளர்களின் பெயர்) வேதியர்கள் (கத்தோலிக்க திருச்சபையில் உள்ள பணியாளர்களின் பெயர்) பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், திருச்சபை பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், திருச்சபைகளால் நடத்தப்படுகிற அனாதை இல்லங்கள், காப்பகங்கள் போன்றவற்றில் முறையான ஊதியம் இல்லாமல் பணியாற்றும் பணியாளர்கள், ஆகியோர் வாரியத்தில் உறுப்பினர்களாக இணைய தகுதி உடையவர்களாவர்.
வாரியத்தில் உறுப்பினர்களாக இணைந்தால் தமிழகத்தில் உள்ள ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நல உதவித் திட்டங்கள் போன்று விபத்து நிவாரணம், கல்வி உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, முதியோர் ஓய்வூதியம், போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை திருச்சபை பணியாளர்கள் நல வாரியம் மூலம் பெற்று பயன் அடையலாம்.
முக்கியமாக இந்த பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்ய தமிழக அரசால் பல்வேறு திருச்சபைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
சி.எஸ்.ஐ திருச்சபை, ஆர்.சி திருச்சபை, தமிழ் இவாஞ்சலிக்கல் லூத்ரன் திருச்சபை, இந்தியன் இவாஞ்சலிக்கல் திருச்சபை, மெத்தடிஸ் திருச்சபை, அட்வன்த் திருச்சபை, இவாஞ்சலிக்கன் திருச்சபை இந்தியா, மார்தோமா சிரியன் திருச்சபை, சிரியன் ஆர்தோடக்ஸ் திருச்சபை, பாப்டிஸ்த் திருச்சபை, இரசண்ய சேனை திருச்சபை, சினாட் ஆப் பெண்டகோஸ்டல் திருச்சபை ஆகிய திருச்சபைகளை சார்ந்த பேராயர்கள் பரிந்துரைக்க வேண்டும் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக அரசு வெளியிட்டுள்ள அரசு ஆணையில் இல்லாத பெரிய திருச்சபைகள் ஏதேனும் இருந்தால் அந்த திருச்சபை பணியாளர்கள் வாரியத்தில் சேருவதற்கு வாய்ப்பு இல்லை எனவும் எங்களது திருச்சபையையும் அரசு ஆணையில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வருகிறார்கள். அப்படி அரசு செய்ய முடியுமானால் தமிழகத்தில் தனி திருச்சபை மற்றும் டயோசிஸ் என நடத்தும் ஆயிரகணக்கான பேராயர்களை அரசு ஆணையில் இணைக்க வேண்டும். ஆயிரக்கணக்கான பேராயர்கள் தமிழகத்தில் இறைப்பணி செய்து வருகிறார்கள். எனவே அரசு முறைப்படி இயங்கும் திருச்சபைகளை மட்டும் அரசு ஆணையில் இணைத்து, அரசு ஆணை வெளியிட்டுள்ளார்கள். எனவே அரசு ஆணையில் இல்லாத திருச்சபை பணியாளர்கள் வாரியத்தில் இணைய முடியாது என்ற ஒரு தவறான தகவலை அரசு ஆணையில் இல்லாத தனி திருச்சபை பேராயர்கள் பரப்பி வருவது வருத்தத்திற்குரிய விஷயம். அந்த திருச்சபையின் பணியாளர்கள் அந்த திரு ச்சபையின் தலைமை போதகரிடமோ, பேராயரிடமோ கையொப்பம் பெற்று பரிந்துரை கடிதமும் பெற்று வாரியத்தில் உறுப்பினராக இணைவதற்கு வழி வகை உள்ளது. எனவே அரசு ஆணையில் உள்ள திருச்சபை சார்ந்த பணியாளர்கள் மட்டுமே இணைய முடியும் என்ற தவறான பார்வையில் உள்ள போதகர்கள், பேராயர்கள் தங்களுடைய திருச்சபையில் உள்ள ஏழ்மை நிலைமையில் உள்ள பணியாளர்கள் அரசின் நலத்திட்டங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
மேலும் வாரியம் திருச்சபை பணியாளர்கள் பயன் அடைய வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையில் தான் அரசு செயல்படுத்தி உள்ளது.
ஆனால் அரசு ஆணையில் இல்லாத திருச்சபை பேராயர்கள், போதகர்கள் தங்களையும் வாரியத்தில் உறுப்பினர்களாக இணைவதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
திருச்சபை சார்ந்த பணியாளர்கள் மட்டுமே வாரிய உறுப்பினர்களாக பதிவு செய்ய முடியும் ஏழ்மை நிலையில் உள்ள பணியாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ளவே இந்த வாரியத்தை அரசு ஏற்படுத்தி உள்ளது. தனி திருச்சபை நடத்தும் பேராயர்கள், போதகர்கள் இந்த வாரியத்தில் இணைந்து அரசின் திட்டங்களை பெற்று பயன் அடைய தடை இல்லை என்பதை முதலில் அவர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
வாரியத்தில் பதிவு செய்தால் திருச்சபைக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட போவதில்லை. வாரியத்தில் உறுப்பினர்களாக இணைவது உங்களுடைய திருச்சபை பணியாளர் மட்டுமே. அந்த பணியாளர் அரசாங்கத்தின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு தாங்கள் மூலம் பரிந்துரைக்கப்படுவது மட்டும் தான். இதன் மூலம் திருச்சபைகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட போவதில்லை. வாரியத்தில் பணியாளர்கள் உறுப்பினர்களாக இணைவதற்கு அந்த திருச்சபைக்கு அரசின் அனுமதி தேவை என்ற விதியும் இல்லை. திருச்சபை நடத்தும் அனைத்து போதகர்களின் பணியாளர்கள் வாரியத்தில் உறுப்பினர் ஆக முடியும்.
சிறிய திருச்சபை, அல்லது ஜெபவீடு நடத்தி வரும் ஒற்றை போதகர் அவரே போதகராகவும், சபையின் பணியாளராகவும் இருக்கும் பட்சத்தில் அந்த ஒற்றை போதகரும் பெந்தேகோஸ்தே ஐக்கியத்தின் மாவட்ட பொறுப்பாளரால் பரிந்துரைக்கப்பட்டு வாரியத்தில் இணைந்து அரசின் நலத்திட்டங்களை பெற்று கொள்ளலாம்.
வாரியத்தில் இணைய வயது வரம்பு 18 வயது பூர்த்தி செய்து 60 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்.
கிறித்தவ மதத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
திருச்சபை, ஜெபவீடு போன்றவற்றில் குறைந்தது ஏழு ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும்.
எனவே தமிழ்நாடு அரசால் கிறித்தவ திருச்சபை பணியாளர்கள் பயன்படக்கூடிய வகையில் ஏற்படுத்தி கொடுத்துள்ள உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் திருச்சபை பணியாளர்களுக்கு பயன் உள்ளதாக அமையும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை. வாரியத்தை ஏற்படுத்தி கொடுத்த தமிழக அரசுக்கு அனைத்து திருச்சபை பேராயர்கள், போதகர்கள், பணியாளர்கள் சார்பில் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என ஜெபசிங் தெரிவித்துள்ளார்.






Comments
Post a Comment