ஏன் இணைக்க வேண்டும் தேவிகுளம் பீர்மேடு உடும்பஞ்சோலையை...? தமிழக எல்லையோர நிலங்களை கேரளா ஆக்கிரமித்து ஸ்வாகா.. விழிக்குமா தமிழகம்?
ஏன் இணைக்க வேண்டும் தேவிகுளம் பீர்மேடு உடும்பஞ்சோலையை...?
தமிழக எல்லையோர நிலங்களை கேரளா ஆக்கிரமித்து ஸ்வாகா.. விழிக்குமா தமிழகம்?
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முல்லைப்பெரியாறு பிரச்சனை எழும்பும்போதெல்லாம் தேவிகுளம் பீர்மேடு குறித்த குரல்களும் தமிழகத்தில் எழாமல் இல்லை.
தமிழகத்திற்கு எல்லை மாநிலங்களாக இருக்கும் ஆந்திரா கர்நாடகா கேரளா ஆகிய மூன்று மாநிங்களில் கேரளாவோடுதான் நாம் நீண்ட தொலைவிலான எல்லையை பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.
தமிழக கேரள எல்லையின் நீளம் குமரி மாவட்டத்தில் உள்ள பாறசாலையில் தொடங்கி நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாளூரில் முடிவடைகிறது. இதன் தொலைவு கிட்டத்தட்ட 822 கிலோமீட்டர். ஆந்திராவோடும் கர்நாடகாவோடும் இந்த அளவிற்கு நாம் எல்லையை பகிர்ந்து கொள்ளாவிட்டாலும், எல்லை பிரச்சனை என்று ஆந்திராவிற்கும், கர்நாடகாவிற்கும் நமக்குமிடையே எதுவும் இல்லை.
ஆனால் மொழி வழியாக இந்தியா பிரிக்கப்பட்டு 62 ஆண்டுகள் நிறைவு பெற்ற பின்னரும், தமிழகம் கேரளத்திற்கும் இடையிலான எல்லை சிக்கல் நீடித்துக் கொண்டே இருக்கிறது. மொழி வழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதே இத்தனை தூரம் நீளமுள்ள தமிழக கேரள எல்லை முறையாக அளக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்பு ஏன் ஏற்படாமல் போனது என்பது தான் நமக்கு முன்னால் இருக்கும் மலையளவு கேள்வி.
1956 மொழிவழி பிரிவினையில் தமிழகம் கேரளாவிடம் இழந்த நிலப்பரப்பாக குறிப்பிடப்படும் 1400 சதுர கிலோமீட்டர் என்பது மேலோட்டமான கணிப்பு தானே தவிர, 2000 சதுர கிலோ மீட்டருக்கு மேல் அப்போதே தமிழகத்தின் நிலங்கள் அவர்களுடைய கைகளுக்கு போய்விட்டது.
822 கிலோமீட்டர் நீளமுள்ள தமிழக கேரள எல்லையில் இதுவரை முறையாக அளவீடு செய்யப்பட்டு இருப்பது 136 கிலோமீட்டர் மட்டும்தான். போக அறுநூறு சதுர கிலோமீட்டர் நிலங்கள் இப்போதும் அவர்களுடைய ஆக்கிரமிப்பின் பிடியில் இருக்கிறது.
எப்போதாவது எங்கேயாவது எழும் இந்த அளவீடு தொடர்பான பிரச்சனைகளை, கவனமாக கழித்துக் கட்டுவதில் கேரளா குறியாக இருப்பதை, கடந்த 2016 ஆம் ஆண்டு கம்பம் மெட்டு அருகே கண்டோம்.
உள்ளபடியே ஒரு நாள் நள்ளிரவு, கம்பம் மெட்டில் திடீரென தமிழக எல்லைக்குள் ஒரு கண்டெய்னரை கொண்டு வந்து இறக்கி வைத்திருந்தார்கள். அதில் Kerala Exice என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. காலையில் அந்தப் பகுதிக்கு ரோந்துக்கு சென்ற வனத்துறை பணியாளர் ஒருவர், இதைக் கண்டு அருகே உள்ள கேரள சோதனை சாவடியில் உள்ள காவலர்களிடம் சென்று கேட்டதற்கு, அவரை தாக்கினார்கள் கேரள காவலர்கள்.
உடனடியாக இரவோடு இரவாக கண்டெயினரை அப்புறப்படுத்திய கேரளா, பெயருக்கு இரண்டு காவலர்களை மட்டும் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது.
கேரளாவின் இந்த செயலுக்கு கம்பம் பள்ளத்தாக்கில் எதிர்ப்பு கிளம்பியதோடு, ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தையும் நடத்தியது அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி.
உடனடியாக இரண்டு மாநிலங்களிலும் உள்ள மேல் மட்ட அதிகாரிகளுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில், கம்பம் மெட்டில் இருந்து எல்லையை அளக்க தீர்மானிக்கப்பட்டு, தமிழகத்தின் சார்பில் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியரும், கேரளா சார்பில் தேவிகுளம் சப் கலெக்டரும் இணைந்து அளவீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.
கம்பம் மெட்டு அருகே உள்ள நாவல் பள்ளத்திலிருந்து தொடங்கியது அளவீடு. நூறு மீட்டருக்கு கூட அளவீடு செல்லவில்லை பிரச்சனை வெடித்தது. ஏனென்றால் கம்பம் மெட்டிலிருந்த கேரள காவல்துறை சோதனை சாவடியே தமிழக எல்லைக்குள் இருப்பதை கண்டறிந்தது தமிழக குழு. ஒன்றரை கிலோ மீட்டர் கூட அளவீடு செல்லவில்லை. 140 ஏக்கருக்கு மேல் கேரளா ஆக்கிரமித்ததோடு அதில் விவசாயமும் செய்து கொண்டிருந்தார்கள் மலையாளிகள்.
அளவீடு தமிழகத்திற்கு சாதகமாக செல்லச் செல்ல கேரள அதிகாரிகள் அளவீடு செய்வதில் முரண்டு பிடித்தார்கள். மந்திப் பாறை வரும்போது பிரச்சனை வெடித்தது.
மூன்றாவது நாள் சர்வே நிறுத்தப்பட்டு அளவீட்டை ரத்து செய்தது கேரளா.
ஏற்கனவே அளவீடு செய்யப்பட்ட பகுதியில் 14 எல்லை கற்களை ஊன்றி வைத்தது தமிழக வனத்துறை. ஆனால் அந்தக் கற்களை எல்லாம் கடந்த 23 .6 .2017 அன்று, பிடிங்கி எறிந்தார்கள் ஹைரேஞ்ச் சம்ரக்ஷண சமிதியைச் சேர்ந்த, இன வெறியர்கள். இதற்குப் பின்னால் அன்றைக்கு இடுக்கி எம்பி ஆக இருந்த வழக்கறிஞர் ஜோயிஸ் ஜார்ஜ் இருந்தார் என்று தமிழக வனத்துறை குற்றச்சாட்டியும் அவர் மீது கடைசிவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கற்கள் பிடிங்கி எறியப்பட்ட ஐந்தாவது நாள் நெடுங்கண்டத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு மாநாட்டை நடத்தியது. அந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த திருவாளர் உம்மன் சாண்டி நாவல்பள்ளம் பகுதிக்கு வந்து அளவீடு செய்யப்பட்ட பகுதியை பார்வையிட்டார்.
அன்றைக்கு தமிழக வருவாய்த்துறை அமைச்சராக இருந்த திரு உதயகுமார் கம்பம் மெட்டுக்கே செல்லாமல், தமிழகப் பகுதிகளை மீட்போம் என்று கதை விட்டு விட்டு வந்து விட்டார்.
இதற்கெல்லாம் பிரதானமான காரணமாக இருப்பது கேரள நிலங்கள் வருவாய் நிலங்களாகவும், தமிழக நிலங்கள் வனத்துறை நிலங்களாக இருப்பதும் தான்... இதை சரி செய்து குறைந்தது கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக நிலங்களை குறைந்தபட்ச வருவாய் நிலங்களாக மாற்ற வேண்டும் என்கிற நமது கோரிக்கை கிடப்பில் போடப்பட்டு கிடக்கிறது.
குமுளி முதல் போடி வரை உள்ள 70 கிலோமீட்டர் தொலைவிற்கு இன்று வரை மலையாளிகள் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் நிலம் கிட்டத்தட்ட 700 ஹெக்டேர் நிலப்பரப்பு.
கடந்த 1994 ஆம் ஆண்டு ஆசாரிபள்ளம் பகுதியில் அதிரடியாக சோதனை நடத்திய தமிழக வனத்துறை கிட்டத்தட்ட 150 எக்டேர் நிலங்களை கேரளாவிடமிருந்து கைப்பற்றியது. ஆனால் அதற்குப் பின்னர் இதுவரை தமிழக வனத்துறை எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை.
குமுளியில் இன்றைக்கு இருக்கும் கேரள காவல்துறை மற்றும் சுங்கத்துறை சோதனை சாவடி, முன்பு இருந்த இடம் தேக்கடி நுழைவு வாயிலில் இருக்கும் மாதா சொரூபத்தின் அருகே என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அங்கிருந்து மெது மெதுவாக கிழக்கு நோக்கி வந்து தமிழக எல்லைக்குள் தான் தங்களுடைய சோதனை சாவடிகளை அமைத்துக் கொண்டிருக்கிறது கேரளா.
கம்பம் மெட்டிலும் இதே நிலைமைதான். அவர்கள் பகுதி வருவாய் நிலமாக இருப்பதால் எளிதாக மலையாளிகள் வந்து குடியேறுவதோடு அதை விவசாய பூமியாகவும் மிக எளிதாக மாற்றி விடுகிறார்கள்.
1990 களில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆக்கிரமிப்பு படலம் இன்று வரை நீடித்துக் கொண்டிருக்கிறது. 2014 காலகட்டங்களில் மறுபடியும் கேரளாவின் மத்திய மண்டலத்தில் இருந்து ஊடுருவிய ஒரு நில ஆக்கிரமிப்பு கும்பல், கிட்டத்தட்ட 500 மீட்டர் வரை தமிழக எல்லையை ஆக்கிரமித்து விவசாயம் செய்து கொண்டிருக்கும்.
இந்த எல்லை அளவீட்டை தமிழக அரசு விரைவாக மேற்கொள்ளாவிட்டால்... மிகப்பெரிய பரப்பை கேரளா தன்வசப்படுத்திவிடும் என்பதோடு, பட்டா சிட்டா வையும் அதற்கு உருவாக்கி விடுவார்கள்.
2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நீலகிரி மாவட்டம் சேரம்பாடி தாலுகாவில் உள்ள தமிழக கேரளா எல்லையான தாளூரில், தமிழக எல்லைக்குள் ஒரு கட்டடத்தைக் கட்டி அதற்கு கேரள மின்சார வாரியத்திலிருந்து மின்சாரம் எடுத்தார் ஒருவர். அது தொடர்பாக பிரச்சனை எழுந்த போது தமிழக எல்லைக்குள் இருக்கும் அந்த வீட்டிற்கு வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி தாசில்தார் பட்டா சிட்டா வழங்கிய கதையை கண்டுபிடித்தோம்.
பிரச்சனை தீவிரமானதும் பட்டாவை ரத்து செய்து உத்தரவிட்டார் வயநாடு மாவட்ட ஆட்சியர்.
குமரி திருநெல்வேலி தென்காசி விருதுநகர் தேனி திண்டுக்கல்
திருப்பூர் கோவை நீலகிரி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்கள் கேரளாவோடு தன்னுடைய எல்லையை பகிர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த ஒன்பது மாவட்ட ஆட்சியர்களும் தங்களது மாவட்ட எல்லையை அளவீடு செய்வதற்காக தமிழக அரசிடம் முறையிட வேண்டும்.
கூடுதலாக தமிழக அரசும் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி, தமிழக கேரள எல்லையை அளவீடு செய்வதோடு, கிட்டத்தட்ட ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை விட்டு ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுவதற்கு கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
1956 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட மொழிவழி பிரிவினை சட்டத்திலுள்ள சரத்துக்கள் தமிழக கேரள எல்லையில் எங்கிலும் இதுவரை முறையாக அமல்படுத்தப்படவில்லை. அந்தச் சட்டத்தினுடைய சரத்துக்களை அமல்படுத்தினாலே தமிழகம் பெறப்போகும் நிலப்பரப்பு கிட்டத்தட்ட 1800 சதுர கிலோமீட்டர்
அதுபோல பெரியார் புலிகள் காப்பக நிர்வாகமும் நிறைய தமிழக வன நிலங்களை ஆக்கிரமித்ததோடு, பெரியார் புலிகள் காப்பகத்தின் கிழக்கு டிவிசனை தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே இருக்கும் தலையணை வரை நீடித்திருக்கிறது.
வெள்ளிமலை சரகத்தின் வழியாக பெரியார் புலிகள் காப்பக வண்டிகள் செல்லும் தாண்டிக்குடி லிமிட், அப்பட்டமாக ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயத்தின் ஒரு பகுதியாகும்.
உள்ளடர்ந்த பகுதிகளுக்கு தமிழக வனத்துறையினர் செல்வதில் காட்டும் சுணக்கத்தால் மலையாள வனத்துறை தேவைக்கு அதிகமான நிலங்களை ஆக்கிரமித்ததோடு அதற்கு எல்லைக்கல்லையும் ஊன்றி வருவது நெடு நாட்களாக நடந்து கொண்டு தான் இருக்கிறது.
அதுபோல தமிழர்களின் பண்பாட்டு தெய்வமான கண்ணகி கோவில் அமைந்திருக்கும் வண்ணாத்திப் பாறை டிவிஷனில் கிட்டத்தட்ட நூறு ஹெக்டேருக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் கேரளா, கண்ணகி கோட்டத்தில் இருந்து 33 மீட்டர் தள்ளி இருக்கும் தனது எல்லையை, கண்ணகி கோட்டம் வரை விரிவு படுத்தியதோடு கோவிலையே சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
நிலம் எத்தகைய முக்கியமானது என்பதை பாலஸ்தீனர்கள் தான் உரக்கக் கூறுவார்கள். நிலம் அத்தனை முக்கியமானது.
கொடைக்கானலில் இருந்து மூணாறை இணைக்கும், கவுஞ்சி கிளாவரை முதல் டாப் ஸ்டேஷன் வரையிலான சாலை 1947 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பிரிட்டிஷ் சர்வேயின் அடிப்படையில் முற்றிலும் தமிழகத்திற்கு சொந்தமானது. இரண்டாம் உலகப்போர் காலத்தில் சென்னையில் இருந்த ஆங்கிலேயர்கள், ஜப்பான் சென்னையின் மீது குண்டு வீசப் போகிறது என்று பயந்து கொச்சிக்கு செல்ல பயன்படுத்திய எஸ்கேப் ரோட்டைத்தான் கேரளா இழுத்து மூடிய தோடு, பாம்பாடும் சோலை தேசிய பூங்கா என்கிற பூங்காவை அமைத்து கிளாவரை முதல் டாப் ஸ்டேஷன் வரையிலான ரோட்டை இழுத்து மூடி இருக்கிறது.
மொழிவழி பிரிவினை சட்டத்தின் அடிப்படையில் மேற்கு தொடர்ச்சி மலை தான் எல்லை பிரிக்கும் இடம். ஆனால் அதற்கு மாறாக இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகாவில் உள்ள மறையூர் காந்தலூர் உள்ளிட்ட பழனி மலை குன்றிலிருந்த பகுதிகளும் கேரளாவிற்கு சென்றது தான் விந்தை.
இத்தனை நடந்தும், எல்லை அளவீடு தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படாத நிலையிலேயே இருக்கிறது.
இதற்கும் உச்ச நீதிமன்றத்திற்கு தான் நாங்கள் செல்ல வேண்டுமா...?
பறிபோன எங்கள் தாய் நிலத்தை இந்த அரசு மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்...
கேரளா அரசோடு நட்பு இருக்கட்டும்...
அந்த நட்பு நம்முடைய உரிமையை விட்டு தராத நட்பாக இருக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.
எல்லை அளவீட்டை மட்டும் நீங்கள் முயற்சி எடுத்து நடத்தினால், ஒட்டுமொத்த தமிழகமும் உங்கள் பின்னால் நிற்கும்... இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.



Comments
Post a Comment