"ஆவினில் முறைகேடாய் பணியில் சேர்ந்தவர்களை தமிழக அரசு காப்பாற்றுகிறதா..?" -பால் முகவர்கள் சங்கம் கேள்வி.
"ஆவினில் முறைகேடாய் பணியில் சேர்ந்தவர்களை தமிழக அரசு காப்பாற்றுகிறதா..?" -பால் முகவர்கள் சங்கம் கேள்வி.
ஆவினில் முறைகேடாய் பணியில் சேர்ந்தவர்களை தமிழக அரசு காப்பாற்றுகிறதா என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கடந்த அதிமுக ஆட்சியின் போது மதுரை, தேனி, விருதுநகர், திருப்பூர், திருச்சி, தஞ்சாவூர், நாமக்கல், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட ஆவினின் பல்வேறு ஒன்றியங்களில் அதிகார துஷ்பிரயோகம் செய்து முறைகேடாக பணி நியமனம் நடைபெற்றதும், அவ்வாறு முறைகேடாக நியமனம் செய்யப்பட்ட 236பணி நியமனங்கள் திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் இறுதியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்திருந்தார்.
முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதமாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் Pஅவ்வாறு கூறி ஓராண்டுகளுக்கு மேலாகியும் கூட ஒரு பணியிடத்திற்கு பல லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து முறைகேடாக பணியில் சேர்ந்த அதிகாரிகளில் ஒருவர் கூட இதுவரை பணிநீக்கமோ, பணியிடை நீக்கமோ செய்யப்படவில்லை எனவும், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களின் உழைப்பால் இயங்கி வரும் ஆவினின் வாழ்வாதாரத்தை ஊழல் அதிகாரிகள் சிதைத்து வருவதாகவும் ஆவினில் பணியாற்றும் நேர்மையான அதிகாரிகள் குமுறி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து அவரை கைது செய்ய இந்தியா முழுவதும் தமிழக காவல்துறை வலைவீசி தேடி ஒருவழியாக கைது செய்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்ட அவர் மீதான வழக்குகளும், நடவடிக்கைகளும் இதுவரை என்ன ஆனதென்றே தெரியவில்லை. அத்துடன் ஆட்சிக்கு வருவதற்கு முன் ஆவினில் உள்ள ஊழல் பெருச்சாளிகளும், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட எவரும் தப்பிக்க முடியாது என கர்ஜித்தவர்கள் தற்போது ஆட்சி அதிகாரத்தை தங்களின் கையில் வைத்துக் கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் நாகர்கோவில் ஆவினில் இளநிலை செயலாளராக பணியாற்றி வரும் அதிகாரிகள் சிலர் புதுக்கோட்டை ஆவினில் மேலாளர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி கன்னியாகுமரியைச் சேர்ந்த ரங்கசாமி என்பவரிடம் சுமார் 30லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக ஒரு சில நாட்களுக்கு முன் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவினில் ஏற்கனவே பணி நியமனம், இயந்திர தளவாடங்கள், பிளாஸ்டிக் கவர், பால் கொள்முதல் என கடந்த காலங்களில் மட்டுமின்றி தற்போதும் தமிழகம் முழுவதும் ஆவின் ஒன்றியங்கள் மற்றும் இணையத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், அதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தியும் கூட இதுவரை ஒரு முறைகேடுகள் தொடர்பாக கூட நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆவினும், முறைகேடுகளும் நகமும், சதையும் போல ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து ஊழல், முறைகேடுகள் ஆவினில் தவிர்க்க முடியாத சக்தியாக, தொடர்கதையாக இருப்பது குற்றம் செய்தவர்களை தமிழக அரசே காப்பாற்றுகிறதோ..? என்கிற சந்தேகம் வலுவாக எழுவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை.
கடந்த காலங்களிலும், தற்போதும் தங்களின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றுக் கொண்டு ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்தவர்களையும், அதற்கு துணை நின்று அதிகார துஷ்பிரயோகம் செய்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டவர்களையும் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும். அத்துடன் கடந்த அதிமுக ஆட்சியில் முறைகேடாக பணியில் சேர்ந்த 236பேர் மட்டுமின்றி தற்போதைய ஆட்சியிலும் லஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்தவர்களையும் உடனடியாக பணி நீக்கம் செயவதோடு, இதுவரை அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியத்தையும் திரும்பப்பெற வேண்டும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தமிழக முதல்வர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என அறிக்கையில் கூறியுள்ளார்.

Comments
Post a Comment