அமராவதி அணை முதல் மூணாறு வரை...
என்ன யோக்கியதையில் கேரளாவிற்கு தூக்கிக் கொடுக்கப்பட்டது?!
(டிஜிட்டல் ரீ சர்வே எனும் பயங்கரவாதம்)
டிஜிட்டல் ரீ சர்வேயால் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகிறார் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
1956 மொழிவழி பிரிவினை எத்தனை மோசடியானது என்பதற்கு, உடுமலைப்பேட்டையில் இருந்து மூணாறு செல்லும் சாலையில் உள்ள அமராவதி அணை முதல், மூணாறு வரை இருக்கும் ஊர்களே சாட்சியாகும்.
தமிழகத்தில் அன்றைக்கு எத்தனை தாராள மனம் படைத்த ஆட்சியாளர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும்.ஒரு சின்னஞ்சிறு மாநிலத்தை எத்தனை ஓவியமாக மலையாளிகள் கட்டமைத்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது, நம்மவர்கள் மீது வெறுப்பு மட்டுமல்ல, வெறியும் ஏற்படுகிறது.
அமராவதி அணையில் இருந்து மூணாறு செல்லும் சாலையில் இரண்டு மாநில எல்லைகளை பிரிக்கும் சின்னாறு சோதனை சாவடி முதலில் வரும். சோதனைச் சாவடியின் மேற்கு புறத்தில் சற்று உள்ளடங்கி இருக்கும் மஞ்சம்பட்டி பள்ளதாக்கில் வாழும் முதுவான்கள் உள்ளிட்ட அனைவரும் தமிழர்கள்.
அங்கிருந்து சற்று தூரத்தில் மறையூர் வருகிறது. இந்த மறையூறை சுற்றி இருக்கும் கிராமங்கள் எல்லாம் பழனி மலைக் குன்றில் அமைந்திருக்கிறது. மொழி வழி பிரிவினை சட்டப்படி மேற்கு தொடர்ச்சி மலையில் உச்சிதான் இரண்டு மாநில எல்லையை பிரிக்கும் இடம்.
அப்படியானால் பழனி மலைக்குன்றில் வரும் மறையூர் சுற்றுவட்டார கிராமங்கள் எப்படி கேரளாவிற்கு போனது. மறையூர் இன்றைக்கு வளர்ந்து வரும் ஒரு பெரிய கிராமம். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் மலையாளிகள் இங்கு வாழ்கிறார்கள்.
மறையூர் பஞ்சாயத்தில் வரும் கூடக்காடு, இருட்டலா, ராஜிவ் நகர்,இந்திரா நகர், பாபு நகர், ஜவகர் நகர், புதச்சி வயல், மாசி வயல், நாச்சி வயல், மேலாடி, மைக்கேல் கிரி, பள்ள நாடு,முதுவாக்குடி என அத்தனை பகுதிகளிலும் வாழ்பவர்கள் 100 விழுக்காடு தமிழர்கள். கிட்டத்தட்ட 12 ஆயிரத்து 399 பேர் வாழும் மறையூரில் ஆயிரம் பேர் கூட மலையாளிகள் இல்லை. ஆனால் அந்தப் பஞ்சாயத்தின் மொழிப் பட்டியலில் ஆங்கிலமும், மலையாளமும் இருக்கிறது, ஆனால் தமிழ் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அந்த பஞ்சாயத்து தலைவி கூட ஒரு மலையாளிதான்.
இதேபோல் அருகில் இருக்கும் காந்தலூர் பஞ்சாயத்தின் மொத்த மக்கள் தொகை 6,758. வீடுகள் என்று பார்த்தால் 1,778. இந்த பஞ்சாயத்தில் 200 மலையாளிகள் அதிகபட்சமாக வாழ்கிறார்கள். இந்தப் பஞ்சாயத்தின் கீழ் வரும் போராடி பள்ளம், கீழாந்தூர், செங்கலார், புத்தூர், பெருமலை, கரச நாடு, மைசன் வயல், டெண்டுகொம்பு, கோவில்கடவு, சுரக்குளம் என எந்தப் பகுதியிலும் மலையாளிகள் பெரும்பான்மையாக இல்லாத நிலையில், இந்த நகரத்தின் பேச்சு,எழுத்து மற்றும் ஆட்சி மொழியாக மலையாளத்தை சட்டபூர்வமாக அறிவித்திருக்கிறது கேரளா.
வரலாற்றுக் காலத்திலேயே பழனி முருகன் கோயிலோடு தொடர்புடைய மேற்கண்ட கிராமங்கள் எல்லாம் இன்றைக்கு மெல்ல மெல்ல மலையாள மயமாகி வருகிறது.
முழுக்க முழுக்க பட்டய நிலம் வைத்திருக்கும் தமிழர்கள் டிஜிட்டல் ரீ சர்வேயால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிற அச்சத்தில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மறையூர் தாண்டி போனால் மூணாறு சாலையில் அடுத்து நம்மை எதிர்கொள்ளும் ஊர் சட்ட மூணாறு. இது கண்ணன் தேவன் மலை கிராமத்தில் வருவதால் இங்குள்ள 100 விழுக்காடு தமிழர்கள் எவருக்கும் பட்டய நிலம் இல்லை. தமிழர்கள் முழுக்க முழுக்க டாட்டா நிர்வாகத்தின் கீழ் வேலை செய்யும் தேயிலைத் தோட்ட தொழிலாளிகள்.
சட்ட மூணாறை தாண்டினால் அடுத்து நம்மை எதிர்கொள்வது வாகுவாரை. வாகுவாரை எஸ்டேட்டில் டீக்கடை வைத்து பிழைப்பதற்கு என்று சில மலையாளிகள் ஊடுருவி இருக்கிறார்களே தவிர, அங்கு வாழ்வது முழுக்க முழுக்க தமிழர்கள்.
அதுபோல் மேல் வாகுவாரை டீ எஸ்டேட், தலையாறு டீ எஸ்டேட், நயமக்காடு டீ எஸ்டேட், கடுகுமுடி டீ எஸ்டேட்,பெட்டி முடி டீ எஸ்டேட், ராஜமலை டீ எஸ்டேட், கன்னிமலை டீ எஸ்டேட், தென்மலை டீ எஸ்டேட், சோத்துப்பாறை டீ எஸ்டேட், குண்டு மலை டீ எஸ்டேட், சோலைமலை டீ எஸ்டேட், சோலையாறு டீ எஸ்டேட், பெரியபாறை மேல் மற்றும் கீழ் டீ எஸ்டேட் என காந்தலூர் முதல் மூணாறு வரை, கிட்டத்தட்ட 54 கிலோ மீட்டர்கள், ஆயிரக்கணக்கில் பெருகிக் கிடக்கிறார்கள் தமிழர்கள்.
இந்த ஊர்களில் மறையூரை தவிர மலையாளிகள் எங்குமில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக இருப்பவர்கள் கூட, மலையாளிகளின் தேசிய தொழிலான சாயாக்கடை வைக்க வந்தவர்கள் மட்டுமே...
இன்றளவும் கிட்டத்தட்ட 90 விழுக்காடு தமிழர்கள் வாழும் இந்தப் பகுதி எப்படி கேரளாவிற்கு போனது. அதிலும் காந்தலூர் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் பெருமலை மோகன்தாஸ் கூட ஒரு தமிழன். மறையூர் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் கிரேசி ஒரு மலையாளி. இந்த ஆதிக்கம் எப்படி தமிழர் கிராமங்களில் புகுத்தப்பட்டது.
கொடுமை என்னவென்றால், சின்னாறு வனச் சோதனை சாவடியை தாண்டி பயணிக்க ஆரம்பித்ததும் நம்மை எதிர்கொள்வது இந்திரா காந்தி தேசியப் பூங்கா,காந்தலூரை ஒட்டி இருக்கும் பகுதிகளில் அங்கிருக்கும் தமிழர்கள் அருகாமையில் குடியேற்றங்களை அமைத்து விடக்கூடாது என்பதற்காக நீலக்குறிஞ்சி சரணாலயம், ராஜமலை பகுதியில் வாழும் தமிழர்கள் கட்டுப்பெட்டியாக வாழ வேண்டும் என்பதற்காக இரவிகுளம் தேசியப் பூங்கா என 58 கிலோமீட்டர் நீளம் கொண்ட பகுதியில், இரண்டு தேசிய பூங்கா, ஒரு சரணாலயத்தை அமைத்து தமிழர்கள் இருக்கும் இடத்தை விட்டு நகர விடாமல் நசுக்கி வைத்திருக்கிறது கேரளா.
இதில் மறையூர் மற்றும் காந்தலூர் பஞ்சாயத்தில் பட்டய நிலம் வைத்திருக்கும் தமிழனை அடக்கி ஒடுக்கவும், அவனது பட்டய நிலத்தை பறிப்பதற்காகவும்தான் நீலக்குறிஞ்சி சரணாலயத்தை அமைத்தது கேரளா. 3200 ஹெக்டேர் பரப்பளவை எல்லையாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நீலக்குறிஞ்சி சரணாலயத்திற்கான இடங்கள், தொடர்ந்து தமிழர்களிடமிருந்து பிடுங்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.கடந்த 2006 ம் ஆண்டு தொடங்கிய இந்த நிலப்பறிப்பு, இன்றுவரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்தப் பகுதியில் வாழும் தமிழர்களின் நிலை அடுத்தடுத்த ஆண்டுகளில் என்னவாகும் என்று நினைத்தால், தூக்கம் வராது நமக்கு.
ஒருபுறம் மொழி நெருக்கடி, மறுபுறம் நீலக்குறிஞ்சி சரணாலயத்திற்காக செய்யப்படும் நில ஆர்ஜிதம், மூன்றாவது முனை தாக்குதலாக டிஜிட்டல் ரீ சர்வே...
இந்த தமிழர்கள் வாழப்பிறந்தவர்களா அல்லது சாகப் பிறந்தவர்களா என்பதை ஒன்றிய அரசு தான் இனி தீர்மானிக்க வேண்டும்.
மலையாளிகள் கொடுக்கும் தொடர் நெருக்கடியால், விரைவில் மறையூர், காந்தலூரில் தமிழர் எழுச்சி பிறக்கும் இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.



.jpg)



Comments
Post a Comment