தேனி வருசநாட்டில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் சார்பில் விழிப்புணர்வு முகாம்!
தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றிய பகுதியான வருசநாட்டில், வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் குழந்தை திருமண தடைச்சட்டம், பெண் குழந்தைகள் உயர்நிலைக் கல்வியிலிருந்து மேல்நிலை கல்வி மற்றும் மருத்துவம் பொறியியல் போன்ற உயர்கல்வி பயிலுதல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண் ஆண் பிறப்பு விகிதம், பெண்களுக்கான இரும்புச் சத்து குறைபாடு உள்ளிட்டவை குறித்து வருசநாடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயபிரகாஷ் தலைமையில் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கி கிராம பகுதியில் முக்கிய வீதிகளில் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பின்பு வருசநாடு தனியார் மண்டபத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பள்ளி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் கலந்து கொண்டு கல்வியைப் பற்றி சிறப்பு உரையாற்றினார். குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாடு குறித்து சகுந்தலா சிறப்புரையாற்றினார். பெண்களுக்கான மருத்துவம் குறித்து கடமலைக்குண்டு மயிலாடும்பாறை மருத்துவ ஒருங்கிணைப்பாளர் சாந்தவல்லி உரையாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பெண்களுக்கான குற்ற சம்பவங்களும் அது குறித்து சட்ட திட்டங்களையும் பற்றி வருஷநாடு சார்பு ஆய்வாளர் ஜெகநாதன் விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிகழ்வில் மாணவ மாணவியர், ஆசிரியர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Comments
Post a Comment