காரைக்குடி சம்பவம்; 26.06.25 வியாழன் அன்று மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்!
காரைக்குடி சம்பவம்; 26.06.25 வியாழன் அன்று மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் முத்துமாரி என்பவர் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு அவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கம், மாநில மையம் சார்பில் மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள கண்டன அறிக்கையில்:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்திற்கு உட்பட்ட ராமசாமி தமிழ் கல்லூரியில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றும் முத்துமாரி என்பவரைத் தாக்கிய அக்கல்லூரியின் தற்காலிக காவலர் பழனியப்பன் மீதும், அவரைத் தூண்டிவிட்ட கல்லூரி முதல்வர் நாகநாதன் மீதும் அளிக்கப்பட்ட புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,
புகார் அளித்து ஒரு வார காலம் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காமல் புகார் அளித்தவரை மிரட்டும் செயலில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,
எதிர் வரும் 26.06.2025 (வியாழன்) அன்று மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டு நிற்கும் முத்துமாரியை பாதுகாக்க வேண்டியதும், அநீதி இழைத்தவர்கள் மற்றும் கடமையை செய்யத் தவறிய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது நமது தார்மீகக் கடமை என்ற அடிப்படையிலும்., அவர் தனிமையில் இல்லை என்பதை உணர்த்தவும் திட்டமிட்டுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தை மாவட்டங்களில் சக்தியாக நடத்திட அனைத்து நடவடிக்கைகளையும் மேற் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.
![]() |
| கொடூரச் செயலில் ஈடுபட்ட தற்கால பணியாளர் பழனியப்பன் |



Comments
Post a Comment