தேனி ஆட்சியர் அலுவலகத்தில் டாக்பியா அனைத்து பணியாளர்கள் சங்கம் கோரிக்கை ஆர்பாட்டம்!
தமிழ்நாடு முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் கீழ் இயங்கி வரும் நியாயவிலைக்கடைகளில் பணிபுரியும் நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் சந்தித்து வரும் பல்வேறு இடர்பாடுகளை களைவது தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கை ஆர்பாட்டம் நடத்தி இதன் இறுதியில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு வழங்கிட முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் 27.06.2025 வெள்ளிக்கிழமை 11.00 மணி அளவில் தேனி மாவட்டத்தில் மாவட்ட தலைவர் K.அருணகிரி தலைமையிலும், மாவட்ட செயலாளர் P.காமராஜபாண்டியன் மற்றும் மாவட்ட பொருளாளர் K. சரவணன் முன்னிலையிலும் மாபெரும் கோரிக்கை ஆர்பாட்டம் நடத்தி தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பும் வகையில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் M.காளிப்பாண்டியன், S.செல்லாண்டி, மாவட்ட இணைசெயலாளர்கள் O.M. பாண்டி, M.சரவணன் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்தில் கீழ்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றிட கோரியும், நியாயவிலைக்கடை பணியாளர் நலன் காத்திட வேண்டியும் பேசினார்கள்.
1. நியாயவிலைக்கடைகளில் தற்பொழுது புளூடூத் மூலம் மின்னனு எடை தராசு இணைக்கப்பட்டு லிற்பனை மேற்கொள்ளும் போது ஒரு குடும்ப அட்டைக்கு பொருள் விநியோகம் செய்திட குறைந்த பட்சம் 8 நிமிடத்திலிருந்து 10 நிமிடம் வரை ஆகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் 50 குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே விநியோகம் செய்ய முடிகிறது. இதனால் பொதுமக்களுக்கும், நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கும் மோதல் போக்கு ஏற்படுவதுடன் பணியாளர்கள் புகார்களுக்கு உள்ளாகும் நிலையும் உருவாகிறது. இதனை களையும் பொருட்டு புளூடூத் முலம் விற்பனை மேற்கொள்வதை எளிமைப்படுத்தப்பட வேண்டும். முற்றிலும் நீக்கிட நடவடிக்கை அல்லது காலதாமதம் ஏற்படாத வகையில் எளிமைப்படுத்தப்பட வேண்டும்.
2. நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கிலிருந்து முதன்மை சங்கங்களுக்கு நகர்வு செய்யப்படும் பொருட்களில் அரிசி 2 கிலோ முதல் 5 கிலோ வரையிலும் மற்றும் சர்க்கரை, துவரம்பருப்பு, கோதுமை ஆகிய பொருட்கள் 1 கிலோ முதல் 2 கிலோ வரையிலும் எடை குறைவாக வழங்கப்படுகிறது எனவே அனைத்து பொருட்களும் சரியான எடையில் விற்பனை முனையத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்யப்பட வேண்டும்.
3. தற்போது முழு நேர கடைகளுக்கு மேம்படுத்தப்பட்ட POS இயந்திரம் வழங்கப்பட்டும், பகுதி நேர கடைகளுக்கு பழைய POS இயந்திரமும் பயன்பாட்டில் உள்ளது. பழைய POS இயந்திரத்தில் கை விரல் ரேகை பதிவின் மூலம் விற்பனையை மேற்கொள்ள முடிவதில்லை, கருவிழி பதிவின் மூலம் மட்டுமே விற்பனையை மேற்கொள்ள முடிகிறது கை விரல் ரேகை பதிவு, கருவிழி பதிவு ஆகிய இரண்டு முறைகளின் மூலமும் விநியோகம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.
4. நியாயவிலைக்கடை பணியாளர்களில் 40 சதவீதம் மகளிரும், 5 சதவீதம் மாற்றுத்திறனாளிகளும் பணிபுரிகின்றனர். எனவே நியாயவிலைக்கடைகளில் உள்ள பணிச்சுமையை கருத்தில் கொண்டு எடையாளர் ஒருவர் அனுமதிக்கப்பட வேண்டும் அது வரை வெளிப்பணி மூலம் உதவியாளர் ஒருவரை பணியமர்த்திகொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
5. விடுமுறை நாளில் நகர்வு பணி மேற்கொள்ள கூடாது என்று அரசு ஆணை மற்றும் பதிவாளர் சுற்றறிக்கை இருந்தும் பெரும்பாலான மாவட்டங்களில் மண்டல இணைப்பதிவாளர், துணைப்பதிவாளர் (பொ.வி.தி) ஆகியோரின் இசைவுடன் கூட்டுறவு சார்பதிவாளர்கள் மூலம் விற்பனையாளர்கள் அச்சுறுத்தப்பட்டு நகர்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது முற்றிலும் கைவிடப்படவேண்டும்.
6. விற்பனையாளர்கள் மாவட்ட தேர்வாணைக்குழு மூலம் நியமனம் செய்யப்படும் பொழுது பணிமூப்பு வரிசை உறுதிப்படுத்தப்படுகிறது. அடுத்த பதவி உயர்வுக்கு இதே பணி மூப்பை அடிப்படையாகக் கொண்டு அனைவருக்கும் பதவி உயர்வில் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
7. விற்பனையாளரும், சங்கத்தின் சிற்றெழுத்தரும் ஒரே பணி நிலையில் உள்ளதால் பதவி உயர்வில் எழுத்தர் பணியிடம் அனுமதிக்கப்பட வேண்டும்.
8. மாவட்டத் தேர்வாணைக்குழு மூலம் நியமிக்கப்பட்ட விற்பனையாளர்கள் தங்களது சொந்த ஊரிலிருந்து சுமார் அறுபது, எழுபது கிலோ மீட்டர் தொலைவில் பணியமர்த்தப்பட்டு குறைவான சம்பளத்தில் சிரமத்துடன் பணியாற்றி வருகின்றனர். இவர்களை சொந்த ஊருக்கு அருகமைந்த சங்கங்களுக்கு நிரந்தரமாக இடமாற்றம் செய்து கொடுக்க தக்க வழிவகைகள் உருவாக்கப்பட வேண்டும். என கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருந்தது.
பின்குறிப்பு: நாம் இந்த மாதம் நியாய விலை கடையில் பொருட்கள் வாங்க சென்றபோது எப்போதும் இல்லாத நீண்ட வரிசை இருந்தது. இடையிடையே POS மெஷினுக்கும் தராசுக்கும் இடையே இணைத்திருந்த அந்த ப்ளூடூத் கனெக்சன் கட்டாகி கட்டாகி திரும்ப வந்து, எடையாளர் அந்த எடையை தூக்கி மறுபடியும் வைக்கும் போது தான் டிஸ்ப்ளேயில் காட்டுகிறது. அதன் பிறகு பணியாளர் சரி என்பதை கொடுத்த பிறகு அந்த ஒரு பரிவர்த்தனை மட்டும் முடிகிறது. இதேபோல் ஒரு ஆளுக்கு மத்திய அரசு அரிசி, மாநில அரசு அரிசி, கோதுமை, பச்சரிசி, சீனி,பருப்பு, எண்ணெய் என 7 பரிவர்த்தனைகள் வரை நடைபெறுகிறது.
பாவம் ரேஷன் கடை பணியாளர்கள்... பொதுமக்கள் கால் வலிக்க நின்று கொண்டு கொடுக்கும் சாபங்களை ஏற்றுக் கொண்டு பணி செய்து கொண்டிருக்கிறார்கள்...


Comments
Post a Comment