பேராசையால், தனியார் நிறுவனத்திடம் அதிக பணம் பிடுங்க வேண்டி
தேனி குப்பி நாயக்கன்பட்டி அருகே அரசுக்கு எதிராக சிலர் வீண் போராட்டம்!
வீண் போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை
தேனி:
நாட்டின் பல பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான காற்றாலைகள் நிறுவப்பட்டு அந்த காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை டவர்கள் மூலம் அரசாங்க துணை மின் நிலையத்திற்கு கொண்டு வந்து நாடு முழுவதும் விநியோகித்து அதன் மூலம் மின்சார பற்றாக்குறை தீர்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தனியார் நிலம் வழியாக டவர் கொண்டு செல்லப்படும் போது, அந்தந்த பகுதிக்கு தெரிவிக்கப்பட்டுள்ள அரசாங்க வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி உரிய இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.
அரசியல் சாசனப்படி ஒரு நிலம் தனிநபர் பேரில் பட்டா பெற்று இருந்தாலும் அரசாங்கத்திற்கு தேவைப்படும் போது அந்த நிலத்தை அரசாங்கத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்பது விதி. அதற்காக அரசு உரிய இழப்பீடு வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
தேனி அருகே குப்பி நாயக்கன்பட்டி பகுதியில் தனியார் காற்றாலைகள் அமைக்கப்பட்டு அந்த காற்றாலைகளில் இருந்து பெறப்படும் மின்சாரத்தை கொண்டு செல்வதற்காக அரசின் அனுமதியுடன் தனியார் நிலங்களில் டவர் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் நடைபெற்று வந்த நிலையில், சிலரின் தூண்டுதல் காரணமாக டவர் மற்றும் மின்சாரம் கொண்டு செல்ல உள்ள வழியில் உள்ள ரேவதி, பழனிச்சாமி, சுப்புலட்சுமி, பாண்டியராஜ், மனோகரன், லெட்சுமி ஆகிய ஆறு நில உரிமையாளர்களில் சிலர் திடீரென தங்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை எனக் கோரி சில தினங்களுக்கு முன் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதன் முன்பு உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நடைபெற்று வந்த முகாமில் அதில் சிலர் கலெக்டரிடம் நேராக மனு கொடுத்தபோது கலெக்டர் நீர்நிலை புறம்போக்கு மற்றும் புறம்போக்கு நிலங்களுக்கு நான் சிறப்பு முடிவு எடுக்கலாம். இது பட்டா நிலம் இதற்கு அரசு விதிமுறைகளில் என்ன உள்ளதோ அது பின்பற்றப்படும் என அறிவித்துவிட்டு சென்றதாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று அந்த ஆறு குடும்பத்தினர் அங்கிருந்த சிலரை அழைத்துக் கொண்டு டவரின் கீழ் நின்று போராட்டம் நடத்துவதாக கூறி தேனியில் இருந்து பல பத்திரிகையாளர்களை அழைத்து பேட்டி கொடுத்தனர். உயர் நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில் உரிய இழப்பீடு வழங்காமல் பணி செய்ய நாங்கள் விடமாட்டோம் என அவர்கள் தெரிவித்து பிரச்சினை செய்தனர். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் முறையான அனுமதியுடன் பணி செய்ய வந்த தனியார் நிறுவனத்தினரை பணி செய்ய விடாமல், டிராக்டர்களை நிறுத்தி பாதைகளை அடைத்தும் அந்தப் பகுதியில் ஒரு வேண்டாத பதட்டத்தை ஏற்படுத்தினர். கண்டமனூர் போலீஸ் நிலைய உதவி ஆய்வாளர்கள் வேல்முருகன் மற்றும் பாண்டியம்மாள் தலைமையில் ஊர் அருகே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்களோடு அதிகாரிகளும் தனியார் நிறுவன சட்ட ஆலோசர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய இழப்பீடு வழங்க தனியார் நிறுவனம் ஏற்கனவே முன்வந்த நிலையில் தங்களுக்கு பெரிய தொகை வேண்டும் என்று கேட்டு பிரச்சினை செய்வதாக ஊர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நடுவே பரவலாக பேசப்படுகிறது. அதிக பணம் பெற வேண்டும் என்ற பேராசையால் இதுபோன்று தேவையில்லாத சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்துபவர்கள் மீது அரசு மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்து ஒடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Comments
Post a Comment